Tuesday, April 13, 2010

தங்கம் தந்த தங்கை!



சன் டிவியில் இரவு 8.30 மணிக்கு
பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும்
"தங்கம்' தொடரில் ரம்யாவின்
தங்கையாக வந்து எல்லோர் மனதிலும்
இடம் பிடித்த ஜோதியை அத் தொடரின்
படப்பிடிப்பு தளத்தில் சந்தித்தோம்.
சின்னத்திரையில் நடிக்க வந்தது எப்படி?
நான் ஆந்திராவைச் சேர்ந்த தெலுங்கு பெண். என்ஜினீயரிங் படித்துவிட்டு ஹைதராபாத்தில் உள்ள மல்டி நேஷனல் கம்பெனியில் வேலை பார்க்க வேண்டும் என்பதுதான் என் ஆசையாக இருந்தது. ஆனால் விதி என்னை சினிமாவில் கொண்டு வந்து விட்டுவிட்டது.
ஒருமுறை ராதிகா மேடம் "தாலிபிரமா' என்கிற தெலுங்கு தொடருக்காக மேக் - அப் டெஸ்ட் எடுத்துக்கிட்டு இருந்தார்கள் என்று கேள்விப்பட்டு என் பெற்றோர்கள் சம்மதத்துடன் போய் பார்த்தேன்.
அந்தத் தொடரில் எனக்கு நிரோஷாவோட மகளாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ராடான் மீடியாவில்தான் நான் முதன் முதலில் நடித்தேன். இப்படி தான் என் சின்னத்திரை பயணம் தொடங்கியது. படிப்பை விட்டுவிட்டு நடிகையாக வருவேன் என்று நான் நினைத்து கூட பார்த்ததில்லை.
முதல் தொடரே எனக்கு ஆந்திராவில் நல்ல பெயரைக் கொடுத்தது. அதன் பிறகு ஹன்ஷா விஷன் தயாரித்த தொடரில் வாய்ப்பு கிடைத்தது. அதை தொடர்ந்து ஏ.வி.எம்.மின் "சொர்க்கம்' தொடர் மூலமாக தான் முதன் முதலில் தமிழில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இப்போழுது நிறைய தமிழ் தொடர்களில் நடித்து வருகிறேன்.
தற்போது என்ன தொடர்களில் நடித்து
வருகிறீர்கள்?
தங்கம் தொடரில் ரம்யாகிருஷ்ணன் தங்கையாக நடித்து வருகிறேன். அவங்களைப் போல பெரிய ஹீரோயின்கூட நடிப்பது ரொம்ப சந்தோஷமா இருக்கு. அதை அடுத்து கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ஏ.வி.எம்.மின் "உறவுக்கு கை கொடுப்போம்' என்கிற தொடரில் நடித்து கொண்டிருக்கிறேன்.
ஒரே நேரத்தில் தமிழ்,தெலுங்கு இரண்டிலும் நடிப்பது கஷ்டமாக இல்லையா எப்படி நேரம் கிடைக்கிறது?
தெலுங்கு எனது தாய் மொழி என்பதால் அதில் நடிப்பதில் எனக்கு அவ்வளவு பெரிய சிரமம் ஒன்றும் தெரியவில்லை. தமிழில் நடிக்க வந்த புதிதில் எனக்குத் தமிழே தெரியாது. எங்கே எப்படி பேச வேண்டும் என்று தெரியாது. இப்போது கொஞ்சம் கொஞ்சமாகத் தமிழ் கற்றுக் கொண்டிருக்கிறேன். இப்போது நான் ரொம்ப நன்றாகவே தமிழ் பேசுவதாக எல்லோரும் சொல்கிறார்கள்.
எனக்கு தமிழ் இன்டஸ்ட்ரி ரொம்ப பிடித்திருக்கிறது. நிறைய தமிழ் தொடர்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசையிருக்கிறது. தமிழ் மக்கள் மரியாதையாகப் பழகுகிறார்கள். "தங்கம்' தொடருக்குப் பிறகு நிறைய தமிழ் மக்களிடம் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.
தெலுங்கில் இரண்டு தொடர்கள் நடித்துக் கொண்டிருக்கிறேன். தமிழில் முன்று தொடர்கள் நடிக்கிறேன். இரண்டு மொழிகளிலும் நடிப்பது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.
சென்னைக்கும், ஆந்திராவுக்கும் மாறி மாறி போய் வரும் போது சில நேரங்களில் நான் சென்னையில் இருக்கிறேனா அல்லது ஆந்திராவில் இருக்கிறேனா என்று குழப்பமாக இருக்கும். இரண்டு மொழியிலும் நடிப்பதில் என்ன கஷ்டம் வந்தாலும் அதை எதிர்த்து போராடி பெரிய இடத்துக்கு வர வேண்டும். சாதிக்க வேண்டும் என்கிற எண்ணம் நிறைய இருக்கிறது.
பெரியதிரைக்குச் செல்லும் எண்ணம் உண்டா?
நல்ல கம்பெனி, பெரிய டைரக்டர், நல்ல ஹீரோ இந்த மாதிரி வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன். பெரிய திரையில் இருந்து நிறைய வாய்ப்புகள் வருகின்றன. வருகிற வாய்ப்புகள் எல்லாம் கிளாமர் ரோலாகவே வருவதால் எனக்கு நடிக்க விருப்பமில்லை. கதையை ஒட்டி கிளாமராக இருந்தால் பரவாயில்லை.
ஒருமுறை கிளாமராக நடித்து விட்டால் அதை தொடர்ந்து அது போன்ற வாய்ப்புகள்தான் அமையும் என்பதால் நல்ல வாய்ப்பு வரும் போது நடிப்பேன். இப்போதைக்கு சின்னத்திரையில் மட்டும்தான் கவனம் செலுத்தி
வருகிறேன்.
உங்களுக்கு என்ன மாதிரி கேரக்டர்கள் நடிக்க பிடிக்கும்?
எனக்கு ஹோம்லியான கேரக்டர் நடிக்க ரொம்ப பிடிக்கும். கிராமத்துப் பொண்ணா நடிக்க பிடிக்கும். எந்த மாதிரி கேரக்டர் ஒத்து வருமோ அது மாதிரி நடிக்க வேண்டும். இப்பொழுது நடித்து கொண்டிருக்கிற தொடர்களும் என் எண்ணம் போலவே கிடைத்திருக்கின்றன. இப்படி ஒவ்வொரு தொடரில் வேறு வேறு மாதிரி நடிப்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. நெகட்டீவ் ரோல்ஸ் நடிக்க வேண்டும் என்ற ஆசையிருக்கிறது.
ரசிகர்களைச் சந்தித்தது உண்டா, என்ன சொல்லுவார்கள்?
ஆந்திராவில் உள்ள மக்களுக்கு என்னை நன்றாக அடையாளம் தெரியும். பொது இடங்களில் அல்லது ஷாப்பிங் போகும் போது எங்காவது பார்த்து விட்டால் என் பக்கத்தில் வந்து பேசுவார்கள், நலம் விசாரிப்பார்கள், என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வார்கள் நான் நடிக்கும் தொடர்களைப் பற்றி விமர்சிப்பார்கள்.
இப்படி அவர்கள் என் மீது அன்பு செலுத்தும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கும். அதே போல் தங்கம் தொடரில் நடிக்க ஆரம்பித்த பிறகு தமிழ் மக்களிடம் இருந்தும் நல்ல வரவேற்பு இருக்கிறது.

No comments:

Post a Comment