Wednesday, February 23, 2011

அம்மாவும் மகளும் நானே: தேவயானி

கோலங்கள் தொடரில் வெளுத்து வாங்கிய அபி (தேவயானி), தற்போது "கொடிமுல்லை'யில் மலர்க் கொடியாக உருமாறியிருக்கிறார். அத்தொடரில் நடிக்கும் அனுபவத்தைப் பற்றி விசாரிக்க, அவரை அசோக்நகரில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தோம்...
"கொடிமுல்லை' தொடரில் நடிக்கும் அனுபவம் எப்படி இருக்கிறது?
"கொடிமுல்லை' எங்கள் சொந்தத் தயாரிப்பு. ஆர்.கே. விஷன் என்ற பெயரில் என் கணவர் ராஜகுமாரன்தான் இத்தொடரைத் தயாரிக்கிறார். "கோலங்கள்' தொடரில் இணை இயக்குநராக இருந்த செந்தில் குமார் இயக்குகிறார்.
"கொடிமுல்லை' என்பது ஒரு கொடி. எங்களோட தொடரின் தலைப்பிலேயே வானம் தாண்டி வளர்பவள் என்று ஒரு வாசகம் கொடுத்திருப்போம். ஒரு கொடி படர்வதற்கு நல்ல முறையில் சரியான சூழ்நிலை இருந்தால், அது மலேசியாவில் உள்ள "இரட்டைக் கோபுர'ங்களின் உயரம் வரை படரக் கூட வாய்ப்பிருக்கிறது. அதுபோலத்தான் ஒரு பெண்ணும். அவளுக்கும் சரியான வாய்ப்புகள், சூழ்நிலைகளும் அமைந்தால் அவளாலும் பல சாதனைகளைச் சாதிக்க முடியும். அந்தமாதிரியான விஷயங்களைச் சொல்வதுதான் "கொடிமுல்லை' தொடர்.
இதில் நான் முதன்முறையாக அம்மா, மகள் என இரட்டை வேடங்களில் நடிக்கிறேன். இருபத்து நான்கு வயதுக் கல்லூரி பெண் மலர்க்கொடியாகவும், அறுபது வயது அம்மா அன்னக் கொடியாகவும் வருவேன். சிவா,அப்சல், துர்கா, நித்யா, காவேரி என்று நிறைய நல்ல நடிகர்கள் நடிக்கிறார்கள். எப்பவுமே மிகவும் மென்மையான கதாபாத்திரங்களில் நடிக்கும் துர்கா இதில் இதுவரை நடிக்காத வில்லி வேடத்தில் நடிக்கிறார்.
இரட்டை வேடங்களில் எந்தக் கதாபாத்திரத்தில் நடிப்பது சவாலாக இருந்தது?
"கோலங்களி'ல் நடிச்ச அபி இதில் இல்லை. மகள் கதாபாத்திரம் நாகரிகமான பெண் வேடம். கார்ப்பரேட் கம்பெனியில் வேலை பார்க்கிற பெண். இதை ரொம்ப சுலபமாக நடித்துவிட்டேன். ஆனால் அம்மா கதாபாத்திரம் செய்வதுதான் மிகவும் சிரமமாக இருந்தது. அந்த வேடத்திற்கான மேக்கப் போட்டுக் கொள்வதற்கே எனக்குக் கிட்டதட்ட இரண்டு மணி நேரம் பிடிக்கும். இருபத்தி ஐந்து வருடங்களாக ஜெயிலில் இருக்கும் ஓர் அம்மா, யாரிடமும் பேசாத மிகவும் அமைதியான, சாந்தமான குணம். அந்த மாதிரி வேடத்தில் நடிப்பதுதான் கடினமானதாக இருந்தது. தொடர் ஆரம்பிக்கும் பொழுது ஜெயிலில் இருக்கிற "எபிசோட்'தான் முதலில் எடுத்தோம். அப்போது என்னுடன் இருந்த சக நடிகர்கள் எல்லாருமே என்னுடைய இரண்டு கதாபாத்திரங்களைப் பார்த்து ரொம்ப ஆச்சர்யப்பட்டார்கள். இப்போது கிட்டதட்ட 21 எபிசோட் முடிந்துவிட்டது. நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
அதைவிட முக்கியமானது, ஒரு தொடரில் நடிக்கும் பொழுது, அதைப் பார்க்க எனக்கே பிடித்திருக்க வேண்டும். அப்போதுதான் ஆடியன்ஸýக்கு அது பிடிக்கும். சில காட்சிகள் பார்க்கும் பொழுது என் நடிப்பை பார்த்து நானே அழுதிருக்கிறேன்.
"கோலங்கள்' தொடருக்காக உங்களுக்கு அரசு விருது கிடைத்திருக்கிறதே?
கிட்டதட்ட ஏழு வருடங்கள் அந்த தொடருக்காக கஷ்டப்பட்டிருக்கோம். இதுவரை வேறு எந்த தொடருமே அவ்வளவு நாள் வந்ததில்லை என்று நினைக்கிறேன். அதுவே ஒரு சாதனைதான். 2007}ஆம் ஆண்டுக்கான சிறந்த சின்னதிரை நடிகைக்கான விருது எனக்கு அறிவிச்சிருக்காங்க. கஷ்டப்பட்டு உழைத்ததற்கான பலன் கிடைத்திருக்கிறது. மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. அந்தத் தொடரின் முழு டீமுக்கும் இந்த வெற்றி சேரும். இந்த விருதுக்காக என்னைத் தேர்ந்தெடுத்த தமிழக அரசுக்கும், என்னை அந்த இடத்திற்குக் கொண்டு போன ஆடியன்ஸþக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

சொந்த ஸ்டுடியோ நிர்வாகம் எப்படி இருக்கிறது?
நான், என் கணவர் இரண்டு பேருமே திரைத் துறையில் இருப்பதால், இதே துறை சார்ந்த ஏதாவது தொழில் செய்யலாம் என நினைத்தோம். அப்படித்தான் ஸ்டுடியோ தொடங்கினோம். எங்கள் ஸ்டுடியோவில், எங்களோட சொந்தத் தயாரிப்பில் தயாராகி சேனலில் வெளிவரும் தொடர்களைப் பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறது. என் மகள் பெயரில் "இனியா சவுண்ட் அன்ட் எடிட்டிங்' நடத்திவருகிறோம். அந்த டைட்டில் டிவியில் வரும்பொழுது மிகவும் பெருமையாக இருக்கிறது. இதன் மூலமாக நிறையப் பேருக்கு வேலை கொடுக்கிறோம் என்கிற திருப்தி இருக்கிறது.
திரைத்துறையில் நிறைய அனுபவம் உங்களுக்கு இருக்கிறது. அடுத்து

இயக்குநராகும் எண்ணம் இருக்கிறதா?
அப்படி எதுவும் எண்ணம் இல்லை. இயக்குநர் என்னும் பொறுப்பு பெரிய விஷயம். அதற்கு நிறைய அறிவு, அனுபவம் தேவை. மிகவும் பொறுமை வேண்டும். சினிமா சம்பந்தப்பட்ட எடிட்டிங், மியூசிக், ரெக்கார்டிங்... என எல்லா விஷயங்களுக்குமான அறிவு இருந்தால்தான் இயக்குநராக வரமுடியும். தற்போது நடிப்பதில்தான் என்னுடைய முழுமையான கவனம் இருக்கிறது. ஏற்கனவே வீட்டில் ஓர் இயக்குநர்தான் இருக்கிறாரே!
துடிப்பான, மென்மையான தேவயானியைப் பார்த்துவிட்டோம். இனி... வில்லியாகப் பார்க்கலாமா?
வில்லியாகவா? நானா? (சிரிக்கிறார்). இப்போதைக்கு அந்த எண்ணம் இல்லை. எதிர்காலத்தில் செய்யலாம். அது அந்தக் கதையைப் பொருத்தது. அப்படியே வில்லியாக நடித்தாலும், அதை ஈடுகட்டுவது போல நல்லவளாகவும் ஒரு பாத்திரத்தில் நடிக்க வேண்டும்.
சினிமாவில் அதிகம் பார்க்கமுடியவில்லையே ஏன்?
தற்போது என் கணவர் இயக்கிக் கொண்டிருக்கும் "திருமதி தமிழ்' என்ற படத்தில், இதுவரை நான் செய்யாத ஒரு கதாபாத்திரத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறேன். மற்றபடி பெரியதிரையில் நடிப்பதற்கு இணையாக சின்னதிரையில் நடிப்பதால், இதுவே திருப்தியா இருக்கிறது.
உங்களுடைய தம்பிகள் நடிக்க வந்துவிட்டார்கள், அவர்களின் வளர்ச்சிக்கு நீங்கள் ஆலோசனை எல்லாம் சொல்வீர்களா?
நகுல் எப்பவும் துறுதுறுன்னு இருப்பான். இரண்டு, முன்று படங்களில் நடித்திருக்கிறான். சாதிக்கணும்ங்கிற வெறியோட இருக்கிற பையன். அடுத்து, மயூர் இப்போதான் நடிக்க வந்திருக்கிறான். இருவருமே நன்றாக வரவேண்டும். அவர்களுக்கு எப்போதும், எந்த நேரத்திலும் என்ன உதவிகள் தேவைப்பட்டாலும் செய்வதற்குத் தயாராக இருக்கிறேன்.
உங்களின் குடும்பத்தைப் பற்றிச் சொல்லுங்களேன்..?
எனக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். பெரியவள் பேர் இனியா, சிறியவள், ப்ரியங்கா. குழந்தைகள் நன்றாகப் படிக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். எதிர்காலத்தில் அவர்கள் நடிக்கவேண்டும் என்று ஆசைப்பட்டால் நடிக்கட்டும்.

Wednesday, February 9, 2011


"ஜெயா டிவி'யில் கே.பாலசந்தர் இயக்கத்தில், புதியதாகத் துவங்கியிருக்கும் தொடர் "சாந்தி நிலையம்'. இதில் நாயகியாக "சொல்ல மறந்த கதை' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான ரதி நடிக்கிறார். இத்தொடரின் படப்பிடிப்பிற்காக சென்னை வந்திருக்கும் அவரிடம் பேசினோம்:

"சாந்தி நிலையம்' தொடரைப்பற்றி சொல்லுங்கள்?
மாமியார் கொடுமை, அழும் பெண்கள், வில்லிகள் என்ற எந்த வழக்கமான சங்கதிகளும் இந்தத் தொடரில் இல்லை. இது முழுக்க முழுக்க சமூகப் பிரச்னையைச் சொல்லும் வித்தியாசமான புதிய தொடர். இதில் பாரதியின் தீவிர ரசிகையான நான், சிறந்த மருத்துவராக இருப்பதுடன் பெரிய மருத்துவமனையையும் நிர்வகிக்கிற கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்.

என்ன மாதிரியான சமூகப் பிரச்னைகள்?
மருத்துவமனைகளில் நாம் சந்திக்கும் இயல்பான பிரச்னைகளும்,அதை எப்படி எதிர்கொள்வது என்பதும்தான் கதைக்களம். ரொம்பவும் யதார்த்தமான கதை. மருத்துவமனைக்குச் செல்லும் ஒவ்வொருவரும் தன் வாழ்க்கையில் சந்தித்த பிரச்னையாகவும் இது இருக்கும்.

"சாந்தி நிலையம்' என்றதும் பழைய திரைப்படம்
ஒன்றின் பெயர் ஞாபகம் வருகிறதே... அதைச் சார்ந்த கதையா?
இல்லை. அந்தப் படத்திற்கும் இந்தத் தொடருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. பொதுவாக மருத்துவமனை என்றால் ஆரவாரமில்லாமல் நிசப்தமாக, சாந்தமாக இருக்கும் இடம். அதைச் சார்ந்து கதை வருவதால் இந்தத் தொடருக்கு "சாந்தி நிலையம்' என்று பெயர் வைத்துள்ளார் இயக்குனர்.

நீண்ட நாட்களாக உங்களைத் திரைத்துறை பக்கம் காணவில்லையே?
ஆமாம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தான் நடிக்க வந்துள்ளேன். நடிக்க வேண்டாம் என்றுதான் கொஞ்ச நாள் விலகி இருந்தேன். நான் பெரியதிரையில் நடிக்க வரும்பொழுது பல் மருத்துவம் படித்துக் கொண்டிருந்தேன். நடிக்க வந்ததால் என் படிப்பு பாதியில் நின்று போனது. எனக்கேற்றதுபோல பாத்திரம் அமையாததால் கொஞ்ச நாள் திரைத்துறையிலிருந்து விலகி மீண்டும் வேறு படிப்பைத் தொடரச் சென்று விட்டேன். தற்பொழுது பெங்களூரில் பி.எஸ்சி., படித்துக் கொண்டிருக்கிறேன்.
இன்னும் ஆறு மாதத்தில் என் படிப்பை முடித்துவிடுவேன். அதன் பிறகும் மேற்கொண்டு படிப்பைத் தொடர ஆசைப்படுகிறேன். இது பாலசந்தர் கதை என்பதாலும், எனக்குக் கண்டிப்பாக முக்கியத்துவம் இருக்கும் என்பதாலும், தவறவிட வேண்டாம் என்றுதான் மறுபடியும் நடிக்க வந்தேன்.
சினிமாவை விட்டு சின்னதிரை பக்கம் வந்தது ஏன்?
"சொல்ல மறந்த கதை' படத்தில் அறிமுகப்படுத்தின சுகி மூர்த்தி தமிழில் ஒளிபரப்பாகும் தங்கம் தொடரைக் கன்னடத்தில் இயக்கப் போவதாகக் கூறி அதில் என்னை நடிக்க கூப்பிட்டார். சின்னதிரை உங்களுக்குப் பொருத்தமாக இருக்கும். நீங்க நடித்துக்கொண்டே படிப்பையும் தொடரலாம்னு சொன்னார். எனக்கும் சரி என்று பட்டது. அதனால்தான் சின்னதிரை பக்கம் வந்தேன். கன்னடத்தில் தங்கம் தொடர் "பங்காரா' என்ற பெயரில் ஒரு வாரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.
குடும்பம்?
அப்பா, அம்மா, ஒரு தம்பி. அக்கா திருமணமாகி செட்டில் ஆகியாச்சு. எல்லோரும் பெங்களூரில் தான் இருக்கிறார்கள். நான் மட்டும் இப்பொழுது நடிப்பதற்காக சென்னை வந்து போகிறேன்.

மங்கா என்ன செய்கிறாள்


சன் டிவியில் மதியம் இரண்டு மணிக்கு ஒளிபரப்பாகும் பெரும்பாலான பெண்களின் ஆதரவைப் பெற்ற "அத்திப்பூக்கள்' தொடரில், தற்பொழுது அஞ்சலியின் குட்டை உடைக்க அயோத்திக்குப்பம் போய் தங்கியிருக்கும் மங்காவிடம் (லஷ்மி) பேசினோம்... தொடரில் வருவது போல படபடவென பொரிந்து தள்ளுகிறார் லஷ்மி.


"அத்திப்பூக்கள்' தொடரில் நடிக்கும் அனுபவம் பற்றிச் சொல்லுங்கள்?
ரொம்ப நல்ல அனுபவம். இந்தத் தொடரில் ஒரு சின்ன இடைவெளிக்குப் பிறகு மீண்டும் என் போர்ஷன் துவங்கியுள்ளது. இது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தக்கூடிய பாத்திரம். இடையில் கொஞ்சம் நாள் என் காட்சிகள் வராமல் இருந்தன. என்னைப் பார்க்கிறவர்கள் எல்லாம் அத்திப்பூக்களில் "உங்களைக் காணோமே' என்று விசாரித்துக்கொண்டே இருந்தார்கள். மீண்டும் நடிக்கத் தொடங்கியபிறகு ரசிகர்களிடமிருந்து அமோக வரவேற்பு.

வேறு எந்தத் தொடரில் நடிக்கிறீர்கள்?
"விளக்கு வெச்ச நேரத்துல', "செல்லமே' இரண்டு தொடர்களிலும் நடித்து வருகிறேன். விளக்கு வெச்ச நேரத்துல தொடரில் தற்போதைக்கு என் சம்பந்தப்பட்ட காட்சிகள் வரவில்லை. நடிப்பு தவிர ஒரு விளம்பரப் பட கம்பெனியில் மீடியா ஆபரேஷன் எக்ஸிகியூட்டிவ்வாக வேலை பார்க்கிறேன். மற்றபடி நிகழ்ச்சி தொகுப்பாளினியாகவும் இருந்து வருகிறேன். இதற்கே நேரம் சரியாக இருப்பதால் நிறைய தொடர்களில் வாய்ப்பு வந்தும் நடிக்க முடியவில்லை.

பல வருடமாக ஒரே தொடரில் நடிக்கும்பொழுது உங்களுக்கு அலுப்பு தட்டியதில்லையா?
அப்படிச் சொல்லுவதைவிட, இத்தனை வருடமாக ஒரு தொடர் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது என்றால் அது எவ்வளவு பெரிய விஷயம்? என்று யோசிக்க வேண்டும். "அத்திப்பூக்கள்' துவங்கி சில வருடங்கள் ஆகியிருந்தாலும் அந்தத் தொடருக்கு ரசிகர்களிடம் இருந்து தொடர்ந்து வரவேற்பு அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது. இதில் இன்னொரு விஷயம் ஒரே மாதிரி கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடிக்கும்பொழுதுதான் அலுப்பு ஏற்படும். அப்படியில்லாமல் வேறு வேறு வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கும்பொழுது போர் அடிக்காது.

நடிப்பு, கம்பெனியில் வேலை, நிகழ்ச்சி தொகுப்பு என்று எப்பொழுதும் பரபரப்பாக இருக்கும் உங்களின் ஓய்வு நேரம்?
நிறையப் பேர் என்னிடம் இப்படித்தான் கேட்கிறார்கள். இப்படி ஓடிக்கிட்டே இருக்கிறீயே உனக்குக் கடினமாக இல்லையாக என்று. ஆனால் எனக்கு ஓய்வு எடுத்துக் கொள்கிறேன் என்று சொல்லிக்கொண்டு சோம்பேறியாக உட்காரப் பிடிக்காது. எப்பொழுதும் எதையாவது செய்து கொண்டே இருக்க வேண்டும்.

"அத்திப்பூக்கள்' தொடரில் எப்போதும் கலகலவென இருக்கிற உங்கள் ஜோடி பொருத்தத்தைப் பற்றி சொல்லுங்கள்?
சுக்ரீவ் எனக்கு ஜோடியாக நடிக்கிறார். அவர் ரொம்ப ஜாலி டைப். செட்டில் எல்லாரிடம் ரொம்ப நல்லாப் பழகுவார். இந்தத் தொடரிலேயே உங்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள்தான் ரிலாக்ஸôகப் போகிறது என்று நிறைய பேர் சொல்லியிருக்கிறார்கள். எங்கள் இரண்டு பேரோட கெமிஸ்ட்ரியும் நன்றாக இருக்கிறது என்றும் சொல்வார்கள். எங்கள் காட்சிகள் வந்தாலே அதற்கு தனி மியூசிக் கொடுக்கிறார்கள். அதுவும் ஒரு மாதிரி காமெடியாக இருக்கும். இதுகூட கலகலன்னு இருப்பதற்கு ஒரு காரணம் என்று
நினைக்கிறேன்.

சின்னதிரை நடிகர்களுக்கு விருதுகள் கொடுப்பதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
சமீபகாலமாகத்தான் இப்படிச் சின்னதிரை நடிகர்களுக்கு விருதுகள் வழங்குகிறார்கள். அது சந்தோஷமாக இருக்கிறது. சினிமாவைப் பொறுத்தவரை ஒரு காலகட்டத்தில் நடிக்க வாய்ப்பு கிடைப்பதே அரிது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் அப்படியில்லை. குறைந்த சம்பளத்திற்குக்கூட நிறைய பேர் நடிக்க வந்துவிடுகிறார்கள். ஆனால் அதைத் தக்க வைத்து கொள்வதுதான் கஷ்டம். அப்படி இருக்கும்பொழுது நடிப்பை விரும்பி வருகிறவர்களுக்கு இந்த விருதுதான் பெரிய சந்தோஷம் அளிக்கும் என்று நினைக்கிறேன்.

Friday, January 7, 2011

எங்‌கள் வீ‌ட்‌டு சீ‌ரி‌யல்

"செல்லமே', "மகள்", "உறவுகள்' என சன்
தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் மூன்று
தொடர்களில் நடித்து வருபவர் சிநேகா
நம்பியார். இவர் தமிழில் மட்டும் இல்லாமல்
கன்னடம், தெலுங்கு சின்னதிரை உலகிலும்
கால்பதித்தவர். மழை ஓய்ந்திருந்த ஒரு மாலை
வேளையில் அவரை சந்தித்தோம். சில்லென காற்று வீச பதில்களும் குளுமையாகவே வந்தன.
"செல்லமே' தொடரில் நடிக்கும் அனுபவம் பற்றி சொல்லுங்கள்?
இது போன்று ஒரு தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததே ரொம்ப சந்தோஷமா இருக்கு. குறிப்பா சொல்லணும்னா ராதிகா மேடம்கூட சேர்ந்து நடிப்பது இரட்டிப்பு சந்தோஷமா இருக்கிறது. படப்பிடிப்பில் பார்த்தால் ஒரு குடும்பமாக ஜாலியா இருக்கும். அதில் வருவது போன்று ஒரு பாந்தமான கேரக்டரில் நான் இதுவரை வேறு எந்த தொடரிலும் செய்யவில்லை. கடந்த இரண்டு மாதமா என் டிராக் அவ்வளவாக வரவில்லை. மற்றபடி இந்தத் தொடரில் நடிப்பது ரொம்ப நல்ல அனுபவம்.
வேறு என்ன தொடர்களில் நடித்துக் கொண்டிருக்கிறீர்கள்?
"செல்லமே' தவிர "மகள்', "உறவுகள்' இந்த இரண்டு தொடரிலும் நடித்து வருகிறேன். "மகள்' தொடரில் மது என்ற கேரக்டர் செய்கிறேன். அதில் நெகட்டீவ்வாக ஆரம்பித்த என் கேரக்டர் இப்பொழுது பாஸிட்டீவ்வாக மாறிவிட்டது. "உறவுகள்' தொடரிலும் ஒரு நல்ல கேரக்டர் செய்கிறேன்.
வில்லத்தனமான கேரக்டர் அல்லது குடும்பப்பாங்கான கேரக்டர்... உங்களுக்கு எது
பிடித்திருக்கிறது?
நெகட்டீவ் கேரக்டர் செய்யும் பொழுது நடிப்பதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது. வில்லத்தனமான கேரக்டர் தான் நம் திறமையை வெளிக்கொண்டு வரும். ஒவ்வொரு எபிசோடிலும் அடுத்து இந்த வில்லி கேரக்டர் என்ன செய்யப் போகிறாள் என்று ரசிகர்களிடம் ஆவலும் எதிர்பார்ப்பும் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். நல்லவளாக ஈசியா நடித்து விடலாம்.
ஆனால் வில்லியாக இருப்பது அவ்வளவு சுலபமல்ல. அதே சமயம் பாஸிட்டீவ் ரோல் வழக்கமான கேரக்டராக இருந்தாலும் ரசிகர்களின் அனுதாபமும் ஆதரவும் நமக்கு நிறைய கிடைக்கும். அதனால ஒரே மாதிரியான கேரக்டராக இல்லாமல் எல்லாவிதமான கேரக்டர்களிலும் நடிக்க வேண்டும். ஒரு தொடரில் நெகட்டீவ் என்றால் அடுத்த தொடரில் பாஸிட்டீவாக நடிக்க வேண்டும் என்பதுதான் ஆசை.
நீங்கள் கன்னட சினிமாத்துறையில் இருந்து
வந்தவரா?
ஆமாம், சொந்த ஊர் பெங்களுரூ. நான் பதினோராம் வகுப்பு படிக்கும் பொழுதே கன்னட இண்டஸ்ட்ரியில் நடிக்க வந்துவிட்டேன். நிறைய கன்னட தொடர்களில் நடித்திருக்கிறேன். அதிலிருந்து தெலுங்கு இண்டஸ்ட்ரியில் வாய்ப்பு கிடைத்தது. அங்கேயும் தொடர்களில் நடித்திருக்கிறேன். அதன் பிறகு தான் தமிழ் இன்டஸ்ட்ரிக்குள்ள வந்தேன். úஸன் மீடியா தான் "அகல்யா' என்ற தொடருக்காக என்னை முதன்முதலில் தமிழில் அறிமுகப்படுத்தினார்கள். இப்போ இங்கேயே செட்டிலாகி சென்னைவாசி ஆகிட்டேன்.
உங்கள் குடும்பம்?
என் அப்பா, அம்மா பெங்களூருவில்தான் இருக்கிறார்கள். அங்கே ஒரு பள்ளிகூடம் நடத்திவருகிறார்கள். ஒரு அண்ணன், ஒரு தங்கை. என் கணவர் குடும்பத்தினர் சென்னையை சேர்ந்தவர்கள். தமிழில் நடிக்க வந்தவுடனேயே எனக்கு திருமணம் ஆகிவிட்டது. எனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள் மாமியார், மாமனார், என் கணவர் என எல்லாருமே கூட்டுக் குடும்பமாக இருக்கிறோம். சீரியலில் கூட்டுக் குடும்பமாக காட்டுவார்களே அதுபோலத்தான் இருக்கும் எங்கள் வீட்டிலும்.