Wednesday, February 23, 2011

அம்மாவும் மகளும் நானே: தேவயானி

கோலங்கள் தொடரில் வெளுத்து வாங்கிய அபி (தேவயானி), தற்போது "கொடிமுல்லை'யில் மலர்க் கொடியாக உருமாறியிருக்கிறார். அத்தொடரில் நடிக்கும் அனுபவத்தைப் பற்றி விசாரிக்க, அவரை அசோக்நகரில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தோம்...
"கொடிமுல்லை' தொடரில் நடிக்கும் அனுபவம் எப்படி இருக்கிறது?
"கொடிமுல்லை' எங்கள் சொந்தத் தயாரிப்பு. ஆர்.கே. விஷன் என்ற பெயரில் என் கணவர் ராஜகுமாரன்தான் இத்தொடரைத் தயாரிக்கிறார். "கோலங்கள்' தொடரில் இணை இயக்குநராக இருந்த செந்தில் குமார் இயக்குகிறார்.
"கொடிமுல்லை' என்பது ஒரு கொடி. எங்களோட தொடரின் தலைப்பிலேயே வானம் தாண்டி வளர்பவள் என்று ஒரு வாசகம் கொடுத்திருப்போம். ஒரு கொடி படர்வதற்கு நல்ல முறையில் சரியான சூழ்நிலை இருந்தால், அது மலேசியாவில் உள்ள "இரட்டைக் கோபுர'ங்களின் உயரம் வரை படரக் கூட வாய்ப்பிருக்கிறது. அதுபோலத்தான் ஒரு பெண்ணும். அவளுக்கும் சரியான வாய்ப்புகள், சூழ்நிலைகளும் அமைந்தால் அவளாலும் பல சாதனைகளைச் சாதிக்க முடியும். அந்தமாதிரியான விஷயங்களைச் சொல்வதுதான் "கொடிமுல்லை' தொடர்.
இதில் நான் முதன்முறையாக அம்மா, மகள் என இரட்டை வேடங்களில் நடிக்கிறேன். இருபத்து நான்கு வயதுக் கல்லூரி பெண் மலர்க்கொடியாகவும், அறுபது வயது அம்மா அன்னக் கொடியாகவும் வருவேன். சிவா,அப்சல், துர்கா, நித்யா, காவேரி என்று நிறைய நல்ல நடிகர்கள் நடிக்கிறார்கள். எப்பவுமே மிகவும் மென்மையான கதாபாத்திரங்களில் நடிக்கும் துர்கா இதில் இதுவரை நடிக்காத வில்லி வேடத்தில் நடிக்கிறார்.
இரட்டை வேடங்களில் எந்தக் கதாபாத்திரத்தில் நடிப்பது சவாலாக இருந்தது?
"கோலங்களி'ல் நடிச்ச அபி இதில் இல்லை. மகள் கதாபாத்திரம் நாகரிகமான பெண் வேடம். கார்ப்பரேட் கம்பெனியில் வேலை பார்க்கிற பெண். இதை ரொம்ப சுலபமாக நடித்துவிட்டேன். ஆனால் அம்மா கதாபாத்திரம் செய்வதுதான் மிகவும் சிரமமாக இருந்தது. அந்த வேடத்திற்கான மேக்கப் போட்டுக் கொள்வதற்கே எனக்குக் கிட்டதட்ட இரண்டு மணி நேரம் பிடிக்கும். இருபத்தி ஐந்து வருடங்களாக ஜெயிலில் இருக்கும் ஓர் அம்மா, யாரிடமும் பேசாத மிகவும் அமைதியான, சாந்தமான குணம். அந்த மாதிரி வேடத்தில் நடிப்பதுதான் கடினமானதாக இருந்தது. தொடர் ஆரம்பிக்கும் பொழுது ஜெயிலில் இருக்கிற "எபிசோட்'தான் முதலில் எடுத்தோம். அப்போது என்னுடன் இருந்த சக நடிகர்கள் எல்லாருமே என்னுடைய இரண்டு கதாபாத்திரங்களைப் பார்த்து ரொம்ப ஆச்சர்யப்பட்டார்கள். இப்போது கிட்டதட்ட 21 எபிசோட் முடிந்துவிட்டது. நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
அதைவிட முக்கியமானது, ஒரு தொடரில் நடிக்கும் பொழுது, அதைப் பார்க்க எனக்கே பிடித்திருக்க வேண்டும். அப்போதுதான் ஆடியன்ஸýக்கு அது பிடிக்கும். சில காட்சிகள் பார்க்கும் பொழுது என் நடிப்பை பார்த்து நானே அழுதிருக்கிறேன்.
"கோலங்கள்' தொடருக்காக உங்களுக்கு அரசு விருது கிடைத்திருக்கிறதே?
கிட்டதட்ட ஏழு வருடங்கள் அந்த தொடருக்காக கஷ்டப்பட்டிருக்கோம். இதுவரை வேறு எந்த தொடருமே அவ்வளவு நாள் வந்ததில்லை என்று நினைக்கிறேன். அதுவே ஒரு சாதனைதான். 2007}ஆம் ஆண்டுக்கான சிறந்த சின்னதிரை நடிகைக்கான விருது எனக்கு அறிவிச்சிருக்காங்க. கஷ்டப்பட்டு உழைத்ததற்கான பலன் கிடைத்திருக்கிறது. மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. அந்தத் தொடரின் முழு டீமுக்கும் இந்த வெற்றி சேரும். இந்த விருதுக்காக என்னைத் தேர்ந்தெடுத்த தமிழக அரசுக்கும், என்னை அந்த இடத்திற்குக் கொண்டு போன ஆடியன்ஸþக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

சொந்த ஸ்டுடியோ நிர்வாகம் எப்படி இருக்கிறது?
நான், என் கணவர் இரண்டு பேருமே திரைத் துறையில் இருப்பதால், இதே துறை சார்ந்த ஏதாவது தொழில் செய்யலாம் என நினைத்தோம். அப்படித்தான் ஸ்டுடியோ தொடங்கினோம். எங்கள் ஸ்டுடியோவில், எங்களோட சொந்தத் தயாரிப்பில் தயாராகி சேனலில் வெளிவரும் தொடர்களைப் பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறது. என் மகள் பெயரில் "இனியா சவுண்ட் அன்ட் எடிட்டிங்' நடத்திவருகிறோம். அந்த டைட்டில் டிவியில் வரும்பொழுது மிகவும் பெருமையாக இருக்கிறது. இதன் மூலமாக நிறையப் பேருக்கு வேலை கொடுக்கிறோம் என்கிற திருப்தி இருக்கிறது.
திரைத்துறையில் நிறைய அனுபவம் உங்களுக்கு இருக்கிறது. அடுத்து

இயக்குநராகும் எண்ணம் இருக்கிறதா?
அப்படி எதுவும் எண்ணம் இல்லை. இயக்குநர் என்னும் பொறுப்பு பெரிய விஷயம். அதற்கு நிறைய அறிவு, அனுபவம் தேவை. மிகவும் பொறுமை வேண்டும். சினிமா சம்பந்தப்பட்ட எடிட்டிங், மியூசிக், ரெக்கார்டிங்... என எல்லா விஷயங்களுக்குமான அறிவு இருந்தால்தான் இயக்குநராக வரமுடியும். தற்போது நடிப்பதில்தான் என்னுடைய முழுமையான கவனம் இருக்கிறது. ஏற்கனவே வீட்டில் ஓர் இயக்குநர்தான் இருக்கிறாரே!
துடிப்பான, மென்மையான தேவயானியைப் பார்த்துவிட்டோம். இனி... வில்லியாகப் பார்க்கலாமா?
வில்லியாகவா? நானா? (சிரிக்கிறார்). இப்போதைக்கு அந்த எண்ணம் இல்லை. எதிர்காலத்தில் செய்யலாம். அது அந்தக் கதையைப் பொருத்தது. அப்படியே வில்லியாக நடித்தாலும், அதை ஈடுகட்டுவது போல நல்லவளாகவும் ஒரு பாத்திரத்தில் நடிக்க வேண்டும்.
சினிமாவில் அதிகம் பார்க்கமுடியவில்லையே ஏன்?
தற்போது என் கணவர் இயக்கிக் கொண்டிருக்கும் "திருமதி தமிழ்' என்ற படத்தில், இதுவரை நான் செய்யாத ஒரு கதாபாத்திரத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறேன். மற்றபடி பெரியதிரையில் நடிப்பதற்கு இணையாக சின்னதிரையில் நடிப்பதால், இதுவே திருப்தியா இருக்கிறது.
உங்களுடைய தம்பிகள் நடிக்க வந்துவிட்டார்கள், அவர்களின் வளர்ச்சிக்கு நீங்கள் ஆலோசனை எல்லாம் சொல்வீர்களா?
நகுல் எப்பவும் துறுதுறுன்னு இருப்பான். இரண்டு, முன்று படங்களில் நடித்திருக்கிறான். சாதிக்கணும்ங்கிற வெறியோட இருக்கிற பையன். அடுத்து, மயூர் இப்போதான் நடிக்க வந்திருக்கிறான். இருவருமே நன்றாக வரவேண்டும். அவர்களுக்கு எப்போதும், எந்த நேரத்திலும் என்ன உதவிகள் தேவைப்பட்டாலும் செய்வதற்குத் தயாராக இருக்கிறேன்.
உங்களின் குடும்பத்தைப் பற்றிச் சொல்லுங்களேன்..?
எனக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். பெரியவள் பேர் இனியா, சிறியவள், ப்ரியங்கா. குழந்தைகள் நன்றாகப் படிக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். எதிர்காலத்தில் அவர்கள் நடிக்கவேண்டும் என்று ஆசைப்பட்டால் நடிக்கட்டும்.

No comments:

Post a Comment