Friday, July 30, 2010

'வேடிக்கை பார்க்கப் போனேன்... வேஷம் கட்டி வந்தேன்!'


ஜெயா டிவியில் ​ தற்போது புதிதாக ஆரம்பித்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் 'வந்தாளே மகராசி' என்ற தொடரின் மூலம் நடிகையாகி எல்லோரையும் கவர்ந்து வருகிறார் ஐஸ்வர்யா.​ இவர் விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இருந்தார்.​ விளம்பரம் ஒன்றில் நடித்துக் கொண்டிருந்த அவரை சந்தித்துப் பேசினோம்:
எப்படி நடிக்க வந்தீர்கள்?
என் அண்ணனுக்குக் காம்பியராக ஆக வேண்டும் என்று நிறைய ஆசையிருந்தது.​ ஒரு முறை விஜய் டிவியில் அதற்கான ஆடிஷன் நடந்தது.​ அதில் கலந்துகொள்ள அண்ணன் போனார்.​ அவரோடு நானும் சும்மா வேடிக்கை பார்க்கப் போயிருந்தேன்.​ ஆனால் அவர் தேர்வாகவில்லை.​ எதிர்பாராதவிதமாக நான் தேர்தெடுக்கப்பட்டேன்.​ வேடிக்கை பார்க்க போன இடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.​ அப்படித்தான் நடிப்புப் பக்கம் வந்தேன்.
தொகுப்பாளினியாக இருந்து 'வந்தாளே மகராசி' தொடருக்குத் தாவியது எப்படி?
மூன்று வருடமாக விஜய் டிவியில் வரும் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்தேன்.​ அதேபோல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு காம்பயரிங் செய்துள்ளேன்.​ ​ அப்போதிலிருந்தே தொடர்களில் நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தன.​ அதில் கொஞ்சமும் விருப்பமில்லாமல் இருந்தேன்.​ ஆனால் இந்தத் தொடருடைய கதை எனக்கு மிகவும் பிடித்தது.​ அதனால் இத்தொடரில் நடிக்கச் சம்மதித்தேன்.
நடிக்கும் அனுபவம் எப்படி?
காம்பயரிங் செய்வதற்கும்,​​ நடிப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.​ ​ காம்பயரிங் நம் வீட்டிலோ,​​ நண்பர்களிடமோ பேசுவது போன்று இயல்பாகப் பேசினால் போதும்.​ அதே சமயம் சில நேரங்களில் சரியாக நிகழ்ச்சியை வழங்கவில்லை என்றால் ​ உடனே முகத்துக்கு நேரே திட்டிவிடுவார்கள்.​ அதே சமயம் நன்றாக இருந்தால் உடனே வாழ்த்துவார்கள்.​ ​ ஆனால் நடிப்பு அப்படியில்லை.​ நடித்து முடித்து,​​ நாடகம் ஒளிபரப்பாகி,​​ வெளி இடங்களுக்குச் செல்கையில்,​​ ரசிகர்களைச் சந்திக்கும்போதுதான் ​ நம்ம என்ன செய்திருக்கிறோம் என்று தெரியும்.​ நடிக்கும்போது அந்தக் கதாபாத்திரமாகவே மாறிவிட வேண்டியிருக்கிறது.​ இது ஒரு வித்தியாசமான,​​ புதுமையான நல்ல அனுபவமாக இருக்கிறது.
வேறென்ன தொடர்களில் நடிக்கிறீர்கள்?
தற்போது இந்த ஒரு தொடரில்தான் நடிக்கிறேன்.​ நான் விஸ்காம் ரெகுலரில் படித்துக் கொண்டிருக்கிறேன்.​ அதனால் நடிப்பதற்கு நேரம் கிடைப்பதில்லை.​ இதற்கே ரொம்ப போராடித் தான் கல்லூரியில் அனுமதி வாங்க வேண்டியிருக்கிறது.​ அதனால் கல்லூரியை முடித்த பிறகே முழுமையாக நடிப்பில் கவனம் செலுத்தலாம் என்றிருக்கிறேன்.​ ​ ​ ஆரம்பத்தில் இருந்தே பெரியதிரையில் நிறைய வாய்ப்புகள் வருகின்றன.​ 'சுப்பிரமணியபுரம்',​ 'சரோஜா' போன்ற படங்களிலும் வாய்ப்புகள் வந்தன.​ படிப்பு காரணமாகவே அந்தப் படங்களில் எல்லாம் நடிக்க முடியாமற் போய்விட்டது.​ இதை தவிர விளம்பரப் படங்களிலும் நடிக்கிறேன்.
வருங்காலத் திட்டம்?
வருங்காலத்தில் திரைக்கு முன் வருவதா அல்லது திரைக்குப் பின் நிற்பதா என்று இன்னும் முடிவு செய்யவில்லை. படிப்பை முடித்த பிறகுதான் அதை முடிவு செய்ய வேண்டும். தொடர்ந்து நடிக்க வாய்ப்புக் கிடைத்தால் சிறிது காலம் நடித்துவிட்டு பிறகு டைரக்ஷன் பக்கம் போகலாம் என்று எண்ணியிருக்கிறேன்.
குடும்பம்?
நான் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண். அப்பா பிரபாகர் மளிகை கடை வைத்திருக்கிறார். அம்மா ராணி குடும்பத் தலைவி. கலைஞர் டிவியில் காம்பயரிங் செய்யும் சந்தோஷ் என் அண்ணன்தான். அவர் நடிப்பதற்கு நிறைய டிப்ஸ் கொடுப்பார். நான் பாட்டி, தாத்தா செல்லம். அவர்கள்தான் என்னை அதிகம் ஊக்கப்படுத்துகிறார்கள்.

"பெண் தாதா நான்!''


கலைஞர் தொலைக்காட்சியில் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும் "மகாலட்சுமி' தொடரில் ஹார்பர் சிங்காரியாக வந்து குள்ளநரித்தனமான வேலைகளை
செய்யும் பெண் தாதாவான பத்மினியை சந்தித்தோம். பக்கத்தில் அமர பயந்து, சற்று தள்ளி அமர்ந்தே பேச்சை ஆரம்பித்தோம்.
எப்படி சின்னத்திரை பக்கம் வந்தீர்கள்?
நான் சிறுவயது முதல் நடித்துக் கொண்டிருக்கிறேன். "மாயக்கண்ணாடி' "தில்' போன்ற படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்திருக்கிறேன். எதையாவது சாதிக்க வேண்டும் என்ற ஆசையினால்தான் நடிப்புத் துறையை தேர்ந்தெடுத்தேன். நான் நடித்த முதல் தொடர் கே.ஆர்.விஜயா அம்மாவோட "மடிசார் மாமி' தொடர்தான். அதை தவிர "சித்தி' தொடரிலும் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கிறேன்.
"மகாலட்சுமி' தொடரில் நடிக்கும் அனுபவம் பற்றி சொல்லுங்கள்?
லட்சுமி மேடம் மெயின் கேரக்டராக நடிக்கிற தொடர்தான் "மகாலட்சுமி'. அதில் ஹார்பர் சிங்காரி என்ற பெயரில் ஒரு பெண் தாதா கேரக்டரில் வருகிறேன். அதாவது லட்சுமியம்மா வீட்டில் இருக்கும் ஒரு பெண்ணை கடத்தி வந்து விற்று விடுவது போல கதை. ஆனால் இதுவரை எனக்கும் லட்சுமி அம்மாவுக்கும் காம்பினேஷன் உள்ள காட்சிகள் வரவில்லை. இப்போது என்னுடைய டிராக் மட்டும்தான் போய்கிட்டு இருக்கிறது.
இந்த மாதிரி பெண் தாதாவாக நடிப்பது எப்படி இருக்கிறது?
அந்தக் காலத்தில் இருந்த டி.ஆர். ராஜகுமாரி, சுந்தரிபாய் போன்ற வில்லி கேரக்டர் செய்ய வேண்டும் என்ற ஆசையில்தான் இந்த மாதிரி வில்லத்தனமான கேரக்டரில் நடிக்கிறேன். வில்லி கேரக்டர் என்றால், "பத்மினியை கூப்பிடுங்க' என்று சொல்ல வேண்டும். பாஸிட்டிவ்வான கேரக்டர்ஸ் செய்ய நிறைய பேர் இருக்காங்க. ஆனால் நெகட்டிவ் கேரக்டர் செய்ய ஒரு சிலர்தான் இருக்காங்க.
நெகட்டிவ் கேரக்டர் என்றால் பலர் வேண்டாம் என்று சொல்லி விடுவார்கள். ஆனால், உண்மையாக சொல்ல வேண்டும் என்றால் நெகட்டிவ் கேரக்டர்கள் செய்பவர்கள்தான் சீக்கிரம் ரீச் ஆகிவிடுவார்கள். அதனால்தான் நெகட்டிவ் கேரக்டர் செய்ய வேண்டும் என்று ஆசைபடுகிறேன்.
இவ்வளவு வில்லத்தனமான கேரக்டர் எதிர்பார்க்கும் நீங்கள் நிஜத்தில் எப்படி?
நடிக்கிற கேரக்டர்தான் வில்லத்தனமே தவிர, நிஜத்தில் நான் ரொம்ப சாஃப்ட்டான கேரக்டர்.
வேறு என்ன தொடர்களில் நடிக்கிறீர்கள்?
விஜய் டிவியில் ஏழு மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சித்தர்கள் சம்பந்தப்பட்ட "யாமிருக்க பயமேன்' என்ற ஆன்மீக தொடரிலும் நடிக்கிறேன்.அதில் மகாலட்சுமிக்கு அம்மாவாக நடிக்கிறேன். ஹார்பர் சிங்காரிக்கும் இந்த தொடருக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். அப்படியே ரொம்ப அமைதியான கேரக்டர் செய்கிறேன்.
பெரிய திரையில் படங்கள் எதுவும் நடித்துக் கொண்டிருக்கிறீர்களா?
ஒரு படம் நடிக்கிறேன். "ஈரம்' படத்தில் நடித்த ஆதி ஹீரோவாக நடிக்கும் "அய்யனார்' படத்தில் நடிக்கிறேன். அடுத்து நல்ல வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறேன். அப்படி வந்தால் நடிப்பேன்.
நீங்கள் நடிக்கும் தொடர்களைப் பார்த்ததுண்டா?
நேரம் கிடைக்கும்போது பார்ப்பேன்முக்கியமாக ஏதாவது தவறு செய்திருந்தால் திருத்தி கொள்ளலாம் என்பதற்காகவே பார்ப்பேன். என் கணவரும் பார்த்து விட்டு உதவி செய்வார்.
குடும்பம்?
என் கணவர் சரவணன் "கிள்ளாதே' என்று ஒரு படம் டைரக்ட் பண்ணிக்கிட்டு இருக்காருஅந்தப் படம் அடுத்த மாதம் ரிலிஸ் ஆக உள்ளது. இரண்டரை வயதில் லட்சுமி நாராயணி என்ற குழந்தை இருக்கிறது.
உங்கள் கணவரும் சினிமாத்துறையில் இருப்பதால்,உங்களுக்கு டைரக்ஷன் செய்கிற எண்ணம் உண்டா?

டைரக்ஷன் செய்கிற எண்ணம் இல்லை. ஆனால் புரொடக்ஷன் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் உண்டு.அதற்கான முயற்சிகள் செய்து கொண்டிருக்கிறேன்.