Wednesday, February 9, 2011


"ஜெயா டிவி'யில் கே.பாலசந்தர் இயக்கத்தில், புதியதாகத் துவங்கியிருக்கும் தொடர் "சாந்தி நிலையம்'. இதில் நாயகியாக "சொல்ல மறந்த கதை' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான ரதி நடிக்கிறார். இத்தொடரின் படப்பிடிப்பிற்காக சென்னை வந்திருக்கும் அவரிடம் பேசினோம்:

"சாந்தி நிலையம்' தொடரைப்பற்றி சொல்லுங்கள்?
மாமியார் கொடுமை, அழும் பெண்கள், வில்லிகள் என்ற எந்த வழக்கமான சங்கதிகளும் இந்தத் தொடரில் இல்லை. இது முழுக்க முழுக்க சமூகப் பிரச்னையைச் சொல்லும் வித்தியாசமான புதிய தொடர். இதில் பாரதியின் தீவிர ரசிகையான நான், சிறந்த மருத்துவராக இருப்பதுடன் பெரிய மருத்துவமனையையும் நிர்வகிக்கிற கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்.

என்ன மாதிரியான சமூகப் பிரச்னைகள்?
மருத்துவமனைகளில் நாம் சந்திக்கும் இயல்பான பிரச்னைகளும்,அதை எப்படி எதிர்கொள்வது என்பதும்தான் கதைக்களம். ரொம்பவும் யதார்த்தமான கதை. மருத்துவமனைக்குச் செல்லும் ஒவ்வொருவரும் தன் வாழ்க்கையில் சந்தித்த பிரச்னையாகவும் இது இருக்கும்.

"சாந்தி நிலையம்' என்றதும் பழைய திரைப்படம்
ஒன்றின் பெயர் ஞாபகம் வருகிறதே... அதைச் சார்ந்த கதையா?
இல்லை. அந்தப் படத்திற்கும் இந்தத் தொடருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. பொதுவாக மருத்துவமனை என்றால் ஆரவாரமில்லாமல் நிசப்தமாக, சாந்தமாக இருக்கும் இடம். அதைச் சார்ந்து கதை வருவதால் இந்தத் தொடருக்கு "சாந்தி நிலையம்' என்று பெயர் வைத்துள்ளார் இயக்குனர்.

நீண்ட நாட்களாக உங்களைத் திரைத்துறை பக்கம் காணவில்லையே?
ஆமாம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தான் நடிக்க வந்துள்ளேன். நடிக்க வேண்டாம் என்றுதான் கொஞ்ச நாள் விலகி இருந்தேன். நான் பெரியதிரையில் நடிக்க வரும்பொழுது பல் மருத்துவம் படித்துக் கொண்டிருந்தேன். நடிக்க வந்ததால் என் படிப்பு பாதியில் நின்று போனது. எனக்கேற்றதுபோல பாத்திரம் அமையாததால் கொஞ்ச நாள் திரைத்துறையிலிருந்து விலகி மீண்டும் வேறு படிப்பைத் தொடரச் சென்று விட்டேன். தற்பொழுது பெங்களூரில் பி.எஸ்சி., படித்துக் கொண்டிருக்கிறேன்.
இன்னும் ஆறு மாதத்தில் என் படிப்பை முடித்துவிடுவேன். அதன் பிறகும் மேற்கொண்டு படிப்பைத் தொடர ஆசைப்படுகிறேன். இது பாலசந்தர் கதை என்பதாலும், எனக்குக் கண்டிப்பாக முக்கியத்துவம் இருக்கும் என்பதாலும், தவறவிட வேண்டாம் என்றுதான் மறுபடியும் நடிக்க வந்தேன்.
சினிமாவை விட்டு சின்னதிரை பக்கம் வந்தது ஏன்?
"சொல்ல மறந்த கதை' படத்தில் அறிமுகப்படுத்தின சுகி மூர்த்தி தமிழில் ஒளிபரப்பாகும் தங்கம் தொடரைக் கன்னடத்தில் இயக்கப் போவதாகக் கூறி அதில் என்னை நடிக்க கூப்பிட்டார். சின்னதிரை உங்களுக்குப் பொருத்தமாக இருக்கும். நீங்க நடித்துக்கொண்டே படிப்பையும் தொடரலாம்னு சொன்னார். எனக்கும் சரி என்று பட்டது. அதனால்தான் சின்னதிரை பக்கம் வந்தேன். கன்னடத்தில் தங்கம் தொடர் "பங்காரா' என்ற பெயரில் ஒரு வாரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.
குடும்பம்?
அப்பா, அம்மா, ஒரு தம்பி. அக்கா திருமணமாகி செட்டில் ஆகியாச்சு. எல்லோரும் பெங்களூரில் தான் இருக்கிறார்கள். நான் மட்டும் இப்பொழுது நடிப்பதற்காக சென்னை வந்து போகிறேன்.

மங்கா என்ன செய்கிறாள்


சன் டிவியில் மதியம் இரண்டு மணிக்கு ஒளிபரப்பாகும் பெரும்பாலான பெண்களின் ஆதரவைப் பெற்ற "அத்திப்பூக்கள்' தொடரில், தற்பொழுது அஞ்சலியின் குட்டை உடைக்க அயோத்திக்குப்பம் போய் தங்கியிருக்கும் மங்காவிடம் (லஷ்மி) பேசினோம்... தொடரில் வருவது போல படபடவென பொரிந்து தள்ளுகிறார் லஷ்மி.


"அத்திப்பூக்கள்' தொடரில் நடிக்கும் அனுபவம் பற்றிச் சொல்லுங்கள்?
ரொம்ப நல்ல அனுபவம். இந்தத் தொடரில் ஒரு சின்ன இடைவெளிக்குப் பிறகு மீண்டும் என் போர்ஷன் துவங்கியுள்ளது. இது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தக்கூடிய பாத்திரம். இடையில் கொஞ்சம் நாள் என் காட்சிகள் வராமல் இருந்தன. என்னைப் பார்க்கிறவர்கள் எல்லாம் அத்திப்பூக்களில் "உங்களைக் காணோமே' என்று விசாரித்துக்கொண்டே இருந்தார்கள். மீண்டும் நடிக்கத் தொடங்கியபிறகு ரசிகர்களிடமிருந்து அமோக வரவேற்பு.

வேறு எந்தத் தொடரில் நடிக்கிறீர்கள்?
"விளக்கு வெச்ச நேரத்துல', "செல்லமே' இரண்டு தொடர்களிலும் நடித்து வருகிறேன். விளக்கு வெச்ச நேரத்துல தொடரில் தற்போதைக்கு என் சம்பந்தப்பட்ட காட்சிகள் வரவில்லை. நடிப்பு தவிர ஒரு விளம்பரப் பட கம்பெனியில் மீடியா ஆபரேஷன் எக்ஸிகியூட்டிவ்வாக வேலை பார்க்கிறேன். மற்றபடி நிகழ்ச்சி தொகுப்பாளினியாகவும் இருந்து வருகிறேன். இதற்கே நேரம் சரியாக இருப்பதால் நிறைய தொடர்களில் வாய்ப்பு வந்தும் நடிக்க முடியவில்லை.

பல வருடமாக ஒரே தொடரில் நடிக்கும்பொழுது உங்களுக்கு அலுப்பு தட்டியதில்லையா?
அப்படிச் சொல்லுவதைவிட, இத்தனை வருடமாக ஒரு தொடர் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது என்றால் அது எவ்வளவு பெரிய விஷயம்? என்று யோசிக்க வேண்டும். "அத்திப்பூக்கள்' துவங்கி சில வருடங்கள் ஆகியிருந்தாலும் அந்தத் தொடருக்கு ரசிகர்களிடம் இருந்து தொடர்ந்து வரவேற்பு அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது. இதில் இன்னொரு விஷயம் ஒரே மாதிரி கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடிக்கும்பொழுதுதான் அலுப்பு ஏற்படும். அப்படியில்லாமல் வேறு வேறு வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கும்பொழுது போர் அடிக்காது.

நடிப்பு, கம்பெனியில் வேலை, நிகழ்ச்சி தொகுப்பு என்று எப்பொழுதும் பரபரப்பாக இருக்கும் உங்களின் ஓய்வு நேரம்?
நிறையப் பேர் என்னிடம் இப்படித்தான் கேட்கிறார்கள். இப்படி ஓடிக்கிட்டே இருக்கிறீயே உனக்குக் கடினமாக இல்லையாக என்று. ஆனால் எனக்கு ஓய்வு எடுத்துக் கொள்கிறேன் என்று சொல்லிக்கொண்டு சோம்பேறியாக உட்காரப் பிடிக்காது. எப்பொழுதும் எதையாவது செய்து கொண்டே இருக்க வேண்டும்.

"அத்திப்பூக்கள்' தொடரில் எப்போதும் கலகலவென இருக்கிற உங்கள் ஜோடி பொருத்தத்தைப் பற்றி சொல்லுங்கள்?
சுக்ரீவ் எனக்கு ஜோடியாக நடிக்கிறார். அவர் ரொம்ப ஜாலி டைப். செட்டில் எல்லாரிடம் ரொம்ப நல்லாப் பழகுவார். இந்தத் தொடரிலேயே உங்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள்தான் ரிலாக்ஸôகப் போகிறது என்று நிறைய பேர் சொல்லியிருக்கிறார்கள். எங்கள் இரண்டு பேரோட கெமிஸ்ட்ரியும் நன்றாக இருக்கிறது என்றும் சொல்வார்கள். எங்கள் காட்சிகள் வந்தாலே அதற்கு தனி மியூசிக் கொடுக்கிறார்கள். அதுவும் ஒரு மாதிரி காமெடியாக இருக்கும். இதுகூட கலகலன்னு இருப்பதற்கு ஒரு காரணம் என்று
நினைக்கிறேன்.

சின்னதிரை நடிகர்களுக்கு விருதுகள் கொடுப்பதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
சமீபகாலமாகத்தான் இப்படிச் சின்னதிரை நடிகர்களுக்கு விருதுகள் வழங்குகிறார்கள். அது சந்தோஷமாக இருக்கிறது. சினிமாவைப் பொறுத்தவரை ஒரு காலகட்டத்தில் நடிக்க வாய்ப்பு கிடைப்பதே அரிது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் அப்படியில்லை. குறைந்த சம்பளத்திற்குக்கூட நிறைய பேர் நடிக்க வந்துவிடுகிறார்கள். ஆனால் அதைத் தக்க வைத்து கொள்வதுதான் கஷ்டம். அப்படி இருக்கும்பொழுது நடிப்பை விரும்பி வருகிறவர்களுக்கு இந்த விருதுதான் பெரிய சந்தோஷம் அளிக்கும் என்று நினைக்கிறேன்.