Wednesday, February 9, 2011


"ஜெயா டிவி'யில் கே.பாலசந்தர் இயக்கத்தில், புதியதாகத் துவங்கியிருக்கும் தொடர் "சாந்தி நிலையம்'. இதில் நாயகியாக "சொல்ல மறந்த கதை' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான ரதி நடிக்கிறார். இத்தொடரின் படப்பிடிப்பிற்காக சென்னை வந்திருக்கும் அவரிடம் பேசினோம்:

"சாந்தி நிலையம்' தொடரைப்பற்றி சொல்லுங்கள்?
மாமியார் கொடுமை, அழும் பெண்கள், வில்லிகள் என்ற எந்த வழக்கமான சங்கதிகளும் இந்தத் தொடரில் இல்லை. இது முழுக்க முழுக்க சமூகப் பிரச்னையைச் சொல்லும் வித்தியாசமான புதிய தொடர். இதில் பாரதியின் தீவிர ரசிகையான நான், சிறந்த மருத்துவராக இருப்பதுடன் பெரிய மருத்துவமனையையும் நிர்வகிக்கிற கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்.

என்ன மாதிரியான சமூகப் பிரச்னைகள்?
மருத்துவமனைகளில் நாம் சந்திக்கும் இயல்பான பிரச்னைகளும்,அதை எப்படி எதிர்கொள்வது என்பதும்தான் கதைக்களம். ரொம்பவும் யதார்த்தமான கதை. மருத்துவமனைக்குச் செல்லும் ஒவ்வொருவரும் தன் வாழ்க்கையில் சந்தித்த பிரச்னையாகவும் இது இருக்கும்.

"சாந்தி நிலையம்' என்றதும் பழைய திரைப்படம்
ஒன்றின் பெயர் ஞாபகம் வருகிறதே... அதைச் சார்ந்த கதையா?
இல்லை. அந்தப் படத்திற்கும் இந்தத் தொடருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. பொதுவாக மருத்துவமனை என்றால் ஆரவாரமில்லாமல் நிசப்தமாக, சாந்தமாக இருக்கும் இடம். அதைச் சார்ந்து கதை வருவதால் இந்தத் தொடருக்கு "சாந்தி நிலையம்' என்று பெயர் வைத்துள்ளார் இயக்குனர்.

நீண்ட நாட்களாக உங்களைத் திரைத்துறை பக்கம் காணவில்லையே?
ஆமாம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தான் நடிக்க வந்துள்ளேன். நடிக்க வேண்டாம் என்றுதான் கொஞ்ச நாள் விலகி இருந்தேன். நான் பெரியதிரையில் நடிக்க வரும்பொழுது பல் மருத்துவம் படித்துக் கொண்டிருந்தேன். நடிக்க வந்ததால் என் படிப்பு பாதியில் நின்று போனது. எனக்கேற்றதுபோல பாத்திரம் அமையாததால் கொஞ்ச நாள் திரைத்துறையிலிருந்து விலகி மீண்டும் வேறு படிப்பைத் தொடரச் சென்று விட்டேன். தற்பொழுது பெங்களூரில் பி.எஸ்சி., படித்துக் கொண்டிருக்கிறேன்.
இன்னும் ஆறு மாதத்தில் என் படிப்பை முடித்துவிடுவேன். அதன் பிறகும் மேற்கொண்டு படிப்பைத் தொடர ஆசைப்படுகிறேன். இது பாலசந்தர் கதை என்பதாலும், எனக்குக் கண்டிப்பாக முக்கியத்துவம் இருக்கும் என்பதாலும், தவறவிட வேண்டாம் என்றுதான் மறுபடியும் நடிக்க வந்தேன்.
சினிமாவை விட்டு சின்னதிரை பக்கம் வந்தது ஏன்?
"சொல்ல மறந்த கதை' படத்தில் அறிமுகப்படுத்தின சுகி மூர்த்தி தமிழில் ஒளிபரப்பாகும் தங்கம் தொடரைக் கன்னடத்தில் இயக்கப் போவதாகக் கூறி அதில் என்னை நடிக்க கூப்பிட்டார். சின்னதிரை உங்களுக்குப் பொருத்தமாக இருக்கும். நீங்க நடித்துக்கொண்டே படிப்பையும் தொடரலாம்னு சொன்னார். எனக்கும் சரி என்று பட்டது. அதனால்தான் சின்னதிரை பக்கம் வந்தேன். கன்னடத்தில் தங்கம் தொடர் "பங்காரா' என்ற பெயரில் ஒரு வாரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.
குடும்பம்?
அப்பா, அம்மா, ஒரு தம்பி. அக்கா திருமணமாகி செட்டில் ஆகியாச்சு. எல்லோரும் பெங்களூரில் தான் இருக்கிறார்கள். நான் மட்டும் இப்பொழுது நடிப்பதற்காக சென்னை வந்து போகிறேன்.

No comments:

Post a Comment