Wednesday, December 2, 2009

காதல் தீ பற்றவில்லை! - ப்ரியாமணி


தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் முத்தழகி பாத்திரமாக பதிந்துப்போன ப்ரியாமணியை சந்திக்க சென்றபோது சென்னை சற்று மழையிலிருந்து ஒதுங்கியிருந்தது.

தமிழ் சினிமாவின் கருப்பு நாயகி, தேசிய விருது நடிகை என்ற புகழோடு தற்போது தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கிலும் தனது நடிப்பு முத்திரையைப் பதித்து வருகிறார்.

மணிரத்னம் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கும் அவரை, பல மொழிப் படங்களும் சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்பதில் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார். சூடான காபியோடு நம்மை வரவேற்றவரிடம் உரையாடல் தொடங்கியது.

தெலுங்கில் தற்போது உங்களைப் பற்றித்தான் பேச்சாமே?

தமிழில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற படமான "நடோடிகள்' திரைப்படத்தின் தெலுங்கு ரீ-மேக்கில் ரவிதேஜாவுடன் நடித்து வருகிறேன். இதையும் சமுத்திரக்கனிதான் இயக்குகிறார். அடுத்து ஜெகபதிபாபுவுடன் நடிக்கிறேன். இதை அறிமுக இயக்குனர் கார்த்திக் இயக்கவிருக்கிறார்.

அடுத்து கன்னடப் படம் ஒன்றிலும் நடித்துக் கொண்டிருக்கிறேன். இது தமிழில் வெளிவந்த "குஷி' படத்தின் ரீ-மேக்தான். நிஜமாத்தான் சொல்றீங்களா? தெலுங்கில் என்னைப் பற்றியா பேசிக்கிறாங்க! கேட்கவே சந்தோஷமா இருக்கு.

ஜெகபதிபாபு கூட எந்த மாதிரியான பாத்திரத்தில் நடிக்கிறீங்க?

ஐய்யோ! மாட்டிவிடப் பார்க்கிறீங்களே. படத்தின் முக்கால் வாசி படப்பிடிப்பு முடிந்து, திரைக்கு வரத் தயாரா இருப்பதால இப்ப சொல்ல மாட்டேன். ஆனால், இதில் எனக்கு முக்கியமான பாத்திரம்னு மட்டும் சொல்லுவேன். படத்தில் துறு துறுன்னு இருக்கிற மாதிரியான பாத்திரம். இது போதுமா?

சரி! கதையாவது என்னன்னு சொல்லுங்க?

விட மாட்டீங்க போலிருக்கே! முழுக்க முழுக்க தெளிவான ஒரு காதல் கதைதான். ஒரு பெண்ணோட பார்வையில் மிகவும் உறுதியான காதலாக இருக்கிற விஷயம், காதலிக்கிற பையனோட பார்வையில அவங்களுக்குள்ளே இருக்கிறது வெறும் பழக்கம் மட்டும்தான். ஆனால் காதல் இல்லை! இதற்கு நேர்மாறாக படத்தோட இரண்டாவது பகுதி அமைக்கப்பட்டிருக்கும். தெலுங்கில் எனக்கு முக்கியமான படமாக இது இருக்கலாம்! (குழப்புறீங்களே முத்தழகி!)

உங்களுக்கு விளம்பரம் அதிகமாக கிடைக்கக் காரணமென்ன?

இதெற்கெல்லாம் காரணம் "பருத்திவீரன்' முத்தழகி பாத்திரம்தான்! தமிழ்நாட்டில் மட்டுமல்ல, மற்ற மாநில ரசிகர்களையும் மிகவும் கவர்ந்த படம் அது.

வெளியிடங்களில் மற்ற மாநில ரசிகர்கள் பார்த்தால், ""உங்க படம் பார்த்தோம் மேடம். ரொம்ப நல்லா பண்ணியிருந்தீங்க''ன்னு அவங்க சொல்லும்போது சந்தோஷமாக இருக்கும். இதற்கெல்லாம் காரணமான இயக்குனர் அமீர் ஸôருக்குத்தான் நன்றி சொல்லணும். அடுத்து மணிரத்னம் ஸôர் படத்தைத்தான் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கேன். அது வெளிவந்தா நடிப்பில் என்னோட அடுத்த பரிமாணத்தையும் பார்ப்பீங்க!

தமிழில் ஒரு இடைவெளி விழுகிற மாதிரி இருக்கே?

நிறைய கதைகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். நல்ல பாத்திரப் படைப்போட வருகிற கதைக்காகத்தான் காத்திருக்கிறேன். நல்ல கதை வரும்போது கண்டிப்பா நடிப்பேன். அப்போது இந்த இடைவெளி தெரியாது!

நகரத்து மைனா, கிராமத்து குயில் எந்த பாத்திரம் பிடிச்சிருக்கு?

இரண்டு பாத்திரங்களுமே எனக்குப் பிடித்தவைதான். இந்த பாத்திரம்தான் பண்ணனும், பண்ணக்கூடாது என்று எந்த வரைமுறையும் நான் வைத்துக் கொள்வதில்லை. எந்த மாதிரியான பாத்திரம் கிடைத்தாலும் நடிப்பேன். எல்லாவிதமான பாத்திரங்களில் நடித்தால்தான், நடிப்பில் ஒரு சமநிலை கிடைக்கும். ரசிகர்களும் இவங்க எந்தப் பாத்திரத்திலும் நடிப்பாங்க என்கிற முடிவுக்கு வருவாங்க. நமக்கும் வாய்ப்புகள் தொடர்ந்து கிடைக்கும். ஒரு குறுகிய வட்டத்திற்குள்ளேயே என்னால சவாரி செய்ய முடியாது!

ஹிந்தி சினிமாவில் நடிப்பது எப்படியிருக்கு?

தமிழில் மணிரத்னம் ஸôர் இயக்குகிற "அசோகவனம்', அப்படியே ஹிந்தியில் "ராவணா' என்கிற பெயரில் தயாராகிறது. இதிலேயும் நான் நடித்திருக்கிறேன். இன்னும் இருபத்தைந்து நாள் படப்பிடிப்புதான் நடைபெற வேண்டியிருக்கு. முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரமொன்றை எனக்கும் கொடுத்திருக்கிறார் இயக்குனர். அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய்ன்னு பெரிய நடிகர்களோட நடிக்கறது மனதிற்கு நிறைவாக இருக்கு!

பேச்சில் யதார்த்தம் தெரிகிறதே? படிப்பில் எப்படி?

உண்மையைச் சொல்லணும்னா படிப்பு மேல எனக்கு பெரிசா ஆர்வம் கிடையாது. எப்போதும் நடனம், விளையாட்டுன்னுதான் ஓடிட்டிருப்பேன். ஆனாலும் அடித்துப் பிடித்து எழுபது சதவீதத்திற்கு மேலே மதிப்பெண்களை வாங்கி விடுவேன். (அப்ப சமர்த்தான பொண்ணுதான்னு சொல்லுங்க!)

குறைக் கூறுபவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீங்க?

எல்லாருமே குறை கூறப்பட்டவர்கள்தான். குறைகளை சுட்டிக்காட்டுறது நல்லதுதான். ஆனால், எப்போதும் குறைகளை மட்டுமே சுட்டிக்காட்டிக் கொண்டிருப்பவர்களை கண்டால்தான் எனக்கு எரிச்சலாக வரும். சில நேரங்களில் என்னிடம் இருக்கும் நல்ல விஷயங்களை மட்டுமே சொல்லும் ஆட்களைக்கூட எனக்குப் பிடிக்காது. ஏன்னா, அவங்க அதில் பொய் சொல்லவும் வாய்ப்பிருக்கு இல்லையா? அதனால், நிறையையும், குறையையும் சேர்த்து சொல்லும் ஆட்களைத்தான் எனக்குப் பிடிக்கும்!

பல மொழிகளில் நடிப்பதால், மொழி பிரச்சினை வந்திருக்கிறதா?

எனக்கு ஓரளவிற்கு எல்லா மொழிகளும் தெரியும். அதனால் பெரும்பாலும் மொழிப் பிரச்சினை வந்ததில்லை! எந்த மொழிக்குப் போனாலும், அங்கு பேச வேண்டிய வசனங்களை பேப்பரில் எழுதி மனப்பாடம் செய்து கொண்டு, பேசி விடுவேன். சந்தேகம் வந்தால், மற்றவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வேன்.

எதிர்பார்க்கும் பாத்திரம் எது?

தமிழில் "மூன்றாம் பிறை' படத்தில் ஸ்ரீதேவி நடித்த பாத்திரம், "படையப்பா'வில் ரம்யா கிருஷ்ணன் நடித்த நீலாம்பரி கேரக்டர், ஹிந்தியில் ராணி முகர்ஜி "பிளாக்' படத்தில் நடித்த வேடம் போன்ற வித்தியாசமான பாத்திரங்கள் எல்லாவற்றிலும் நடிக்க வேண்டுமென்கிற ஆசை இருக்கிறது.

காதல் தீ உங்களையும் பற்றிக் கொண்டிருக்கிறதா?

இதுவரைக்கும் காதல் தீ பற்றிக் கொள்ளவில்லை. பத்திக்கிட்டா, கண்டிப்பா உங்ககிட்ட மட்டும் ரகசியமா சொல்றேன்.

No comments:

Post a Comment