Thursday, June 24, 2010

சஹானா சாரல் தூவுதோ..!

சின்னத்திரை தொடர்கள் மூலம் தனது அமைதியான நடிப்பால் ரசிகர்களின் மனதை கவர்ந்த பிரபல கர்நாடக இசை பாடகியான அனுராதா கிருஷ்ணமூர்த்தியை ஒரு திரைவிழாவில் சந்தித்தோம்.
பிரபல பாடகியான நீங்கள் சின்னத்திரை பக்கம் வந்தது எப்போது, எப்படி?
ஜெயா டிவியில் "சஹானா' என்ற தொடர் மூலம் சின்னத்திரையில் என்னை அறிமுகப்படுத்தியவர் பாலசந்தர் சார்தான். "சிந்து பைரவி' படத்தின் இரண்டாம் பகுதிதான் அந்தத் தொடர். சுஹாசினி செய்த அந்தக் கதாபாத்திரத்தை நான் செய்தேன். அந்தக் கதைக்கு நான் பொருத்தமாக இருப்பேன் என்று என்னை நடிக்க வைத்தார் பாலசந்தர். அதுவே எனக்குப் பெருமையாக இருந்தது.
இப்போது என்ன என்ன தொடர்கள் நடித்துக் கொண்டிருக்கிறீர்கள்?​​
கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்யராஜ் சாரோட "விளக்குவெச்ச நேரத்துல', பாலிமர் சேனலில் ஒளிபரப்பாக உள்ள "மூன்று முகம்' தொடரில் நடித்துள்ளேன். தற்போது இந்த இரண்டு தொடர்கள்தான்.
அரசி தொடரில் உங்கள் நடிப்பை பார்த்துவிட்டு உங்கள் நண்பர்கள், வீட்டில் உள்ளவர்கள் என்ன சொன்னார்கள்?​​
ராதிகாவுடன் நடிதது நல்ல அனுபவமாக இருந்தது.புரொடியூசரா,நடிகையா ரொம்ப சாலியான அவரகளுடன் நடித்தது ரொம்ப நம்பிக்கையாக இருந்தது. அந்தத் தொடரில் என்னை கொடுமைப்படுத்துவது போல் வரும் காட்சிகளையெல்லாம் என் மாமியார், என் நண்பர்கள் எல்லாம் பார்த்துவிட்டு இந்த மாதிரி கேரக்டர் எல்லாம் செய்ய வேண்டாம் என்று சொல்வார்கள்.
மேடையில் பாடல்கள் பாடுவதற்கும், திரையில் நடிப்பதற்கும் என்ன வித்தியாசம் உணர்ந்தீர்கள்? எது சுலபமாக இருப்பதாக நினைக்கிறீர்கள்?​​
மேடை கச்சேரிகள் மக்களின் பார்வையில் நேரடியாக செய்கிறோம். ஆனால் திரையில் அப்படியில்லை. நம்ம மனதிற்குள் ஒரு கேரக்டரை சித்திரிச்சு அதை நடித்து மக்களிடம் டிவியின் மூலமா கொண்டு செல்கிறோம். இரண்டுமே சுலபம் இல்லை. இரண்டிலுமே கஷ்டங்கள் இருக்கின்றன. இரண்டிலுமே முழுமையான கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.
நீங்கள் நடித்த கேரக்டரில் ரொம்பவும் விரும்பி நடித்த கேரக்டர் எது?​​
"சஹானா' சிந்து, "திருப்பாவை' ரங்கநாயகி, "விளக்குவெச்ச நேரத்துல' ஞானாம்பிகாவாக, பாலிமர்காக இப்போது நடித்திருக்கும் திலகவதி கேரக்டர்... எல்லாமே நான் ரொம்ப விரும்பி நடித்தவைதான். அதில் ரொம்ப பிடித்தது "சஹானா' தொடர். ஏன் என்றால் அதுதான் நான் முதன் முதலில் நடித்த தொடர். நடிப்பே தெரியாமல் செய்தது அந்த கேரக்டர். அதே மாதிரி எனக்கு அமைந்த கதாபாத்திரங்களின் பெயர்களும் கடவுள் கிருபையால் கிடைத்தது என்று நினைக்கிறேன்.
நீங்கள் விரும்பி ரசிக்கும் சங்கீதம் யாருடையது?​​
நான் எப்பவுமே சொல்வது போல் எம்.எஸ்.அம்மாவின் இசையும்என் தந்தையின் இசையும்தான் மிகவும் விரும்பி ரசிப்பேன். ஆனால் விதவிதமான சங்கீதங்களைக் கேட்க கேட்க நான் புரிந்து கொண்ட ஒரு விஷயம் என்னவென்றால் சங்கீதம் ஒரு வாகனம் போல பயணம் செய்து கொண்டே இருக்கும். அதில் உங்கள் மனதை தாக்கி ஒரு சங்கீதம் ஈரப்படுத்தியது என்றால் அது யார் பாடினாலும் ரசிக்க தோன்றும். அப்படி பாதித்தவர்கள் ஒவ்வொருத்தர் பெயராக சொல்ல வேண்டும் என்றால் நேரம் போதாது.
சாந்தமான குரலால் உங்கள் ரசிகர்களை ஈர்த்து வைத்திருக்கும் ரகயம் என்ன?​​
என் இசை அப்படி ரசிகர்களை ஈர்த்து வைத்திருந்தால் கடவுளுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். அதே போல எனக்கு இந்த சங்கீதத்தை அளித்த என் தாய் தந்தைக்கும், எம்.எஸ்.அம்மாவுக்கும் தான் நன்றி சொல்லணும். சங்கீதம் என்று இல்லை எந்த ஒரு வேலையாக இருந்தாலும் அதை முழு மனதோடு, ஆத்மார்த்தமாக செய்தால் வெற்றி நிச்சயம். அதே போல நம் தன்மானத்துக்கு எந்த பாதிப்பும் இல்லால் செய்தால் நம் உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
உங்கலுடைய இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருப்பவர்கள் யார்?​​
என் கணவர், புகுந்த வீட்டு நபர்களும், பிறந்த வீட்டு நபர்களும் ரொம்ப துணையாக இருக்கிறார்கள். அதேபோல் சினிமாத் துறையில் இருந்து நிறைய பேர் உறுதுணையாக இருக்கிறார்கள். எனக்கு கச்சேரிகள் வரும் நாட்களில் டேட்களை மாற்றி கொடுத்து நிறைய ஒத்துழைப்பு தருகிறார்கள்.இந்த நேரத்தில் அவர்களுக்கு நன்றி சொல்லிக் கொள்ள வேண்டும்.
உங்கள் ஓய்வு நேரத்தை எப்படிச் செலவிடுகிறீர்கள்?
கற்றது கையளவு, கல்லாதது உலகளவு என்பார்களே அது போல சங்கீதத்தில் பாடம் செய்து கொள்வேன். புத்தகங்கள் படிப்பேன். இப்போது சமீப காலமாக நிறைய படங்கள் பார்க்க ஆரம்பித்துள்ளேன். எனக்கென்று ஒரு சிறிய நண்பர்கள் வட்டம் இருக்கிறது. அவர்களோடு அமர்ந்து நிறைய நல்ல விஷயங்களைப் பகிர்ந்து கொள்வேன்.

No comments:

Post a Comment