Thursday, June 24, 2010

பங்குச் சந்தை விவரங்கள் என்றாலே பெரும்பாலானோருக்கு எட்டிக்காய் கசப்பாக இருக்கும்.​ அதை அழகுத் தமிழில் விவரித்து அசத்தி வருகிறார் அருள்செல்வி.​ மக்கள் தொலைக்காட்சியில் தினமும் காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரை 'வளாகம்' நிகழ்ச்சியின் மூலம் எடுத்துச் சொல்லும் அவரைச் சந்தித்தோம்.
நிகழ்ச்சி தொகுப்பாளினியானது எப்படி?​​
நான் கல்லூரி முடித்துவிட்டு பள்ளி ஆசிரியையாக வேலை பார்த்துக்கொண்டிருந்தேன்.​ திருமணமானதால் ஆசிரியை வேலையைத் தொடர முடியாமல் வீட்டில் இருந்தேன்.​ அந்த நேரத்தில் மக்கள் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் தேவை என்று விளம்பரப் படுத்தியிருந்தார்கள்.​ எனக்குத் தமிழ் மீது இருந்த ஆர்வத்தினால் அதற்கு விண்ணப்பித்தேன்.​ ஆடிஷனுக்குக் கூப்பிட்டார்கள்.​ சென்று வந்த இரண்டு நாளில் நான் தேர்வாகி என்னுடைய நிகழச்சியைத் தொகுத்து வழங்க ஆரம்பித்துவிட்டேன்.​ ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது.
​ ​தற்போது என்னென்ன நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறீர்கள்?​​
காலை 8.30 முதல் 9.30 வரையில் ஒளிபரப்பாகும் பங்குச் சந்தை தொடர்புடைய 'வளாகம்' நிகழ்ச்சியும்,​​ வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகும் 'கை மணம்' என்ற நிகழ்ச்சியும் வழங்கிக் கொண்டிருக்கிறேன்.​ ஒரு சில நேரங்களில் வழக்கமான தொகுப்பாளர்கள் வரவில்லை என்றால் வேளாண் சந்தை,​​ ஏற்றுமதி இறக்குமதி,​​ வேலைவாய்ப்பு தகவல் போன்ற ​ நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குவேன்.
​ ​பொதுமக்களிடம் நேரடித் தொடர்பு கொண்டு உரையாடும்போது என்ன உணர்வு ஏற்படும்?​​
சந்தோஷமாக இருந்தாலும் சரி,​​ கோபமாக இருந்தாலும் சரி கேமிரா முன் வந்து நின்று விட்டால் எல்லாவற்றையும் மறந்து நிகழ்ச்சியில் மட்டுமே கவனம் இருக்கும்.​ சில சமயங்களில் ஊர் பக்கத்தில் இருந்து மக்கள் பேசும் போது அவர்கள் தமிழைக் கேட்டதும்,​​ முகம் தெரியாத நபராக இருந்தாலும் ஓர் இனம் புரியாத சந்தோஷம் ஏற்படும்.​ நம்ம சொந்த ஊரில் இருந்து தொடர்பு கொண்டு பேசுகிறார்கள் என்று ஏதோ ஒரு ஈர்ப்பு இருக்கும்.​ அதே சமயத்தில் கிராமத்து மக்களிடம் ஏற்பட்டிருக்கும் ​ வளர்ச்சியையும்,​​ விழிப்புணர்வையும் தெரிந்துகொள்ள முடியும்.​ ​
தொடர்களில் உங்களைப் பார்க்க முடியவில்லையே?​​
தொடர்களில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வருகின்றன.​ ஆனால் எனக்கு நடிப்பதில் அவ்வளவாக விருப்பமோ,​​ ஆர்வமோ இல்லை என்பதால் வாய்ப்புகளை ஏற்றுக் கொள்வதில்லை.​ ஆனால் எனக்கு சிறு வயது முதலே விளம்பரப் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.​ அதற்கு இது வரை சரியான வாய்ப்பு அமையவில்லை.
மக்கள் தொலைக்காட்சியைப் பொருத்தவரை தமிழுக்கு முன் உரிமை அதிகமாக இருக்குமே எப்படிச் சமாளீக்கிறீர்கள்?​​
ஆங்கிலம் கலக்காமல் நல்ல தமிழில் பேசி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவது எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது.​ நிகழ்ச்சி வழங்கும் ஒரு மணி நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் ஆங்கிலம் கலந்து பேசுவதை நினைத்தால் சில நேரம் வெட்கமாக இருக்கும்.​ பொதுவாக நிறைய பேர் என்னிடம் கேட்டிருக்கிறார்கள் ​ எப்படி ஆங்கிலம் கலக்காமல் உங்களால் தமிழில் மட்டுமே பேச முடிகிறது என்று.​ எனது குடும்பம் தமிழ் பாரம்பாரிய மிக்க குடும்பம்.​ என் வீட்டில் உள்ளவர்கள் எல்லாருமே தமிழ் எம்.ஏ.​ படித்தவர்கள்.​ அதனால் பொழுதுபோக்குக்காக அமர்ந்து பேசும்போது கூட சிலப்பதிகாரம்,​​ மணிமேகலை போன்றவற்றைப் பற்றிப் பேசுவார்கள்.​ அதுதான் எனக்கு தமிழ் மீது பற்று ஏற்பட ஒரு காரணம் என்று நினைக்கிறேன்.​ இப்படி ஒரு மணி நேரம் தமிழிலேயே பேசுவதை எனக்குக் கிடைத்த அரிய வாய்ப்பாக நினைக்கிறேன்.​ ​
உங்களுடைய பொழுதுபோக்கு என்ன?​​
எனக்கு கைவினைப் பொருட்கள் செய்வதில்,​​ ஓவியம் வரைவதில்,​​ தஞ்சாவூர் ஓவியங்கள் வரைதல் போன்ற கலைநயம் மிக்க வேலைகள் மீது ஈடுபாடு அதிகம்.​ அதற்கான பயிற்சி வகுப்புகளும் நடத்தி வருகிறேன்.​ யோகா முறைப்படி கற்றுக்கொண்டிருக்கிறேன்.​ அதனால் யோகா பயிற்சியும் அளித்து வருகிறேன்.
உங்கள் எதிர்காலத் திட்டம் என்ன?​​
ஒரு தயாரிப்பாளராக நிகழ்ச்சிகளைத் தயாரித்துக் கொடுக்க வேண்டும் என்கிற ஆசை நிறைய இருக்கிறது.
-ஸ்ரீதேவிகுமரேசன்

No comments:

Post a Comment