Tuesday, October 13, 2009

என் கல்யாணம் எப்போது - நடி‌கை‌ சங்‌கவி‌


கன்னடத்தில் பிஸியாக இருக்கும் நடிகை சங்கவி ஜெயா டிவியில் புதியதாக ஒளிபரப்ப இருக்கும் புதிய தொடர் "சாவித்திரி'யில் அதன் நாயகியாக நடிக்கிறார். நடிகை சங்கவியை படப்பிடிப்புத் தளத்தில் சந்தித்தோம். ஒரு ஷாட் முடிந்து அடுத்த ஷாட்டிற்குச் செல்லும் இடைவெளியில் நம்மிடம் பேசினார்.
ஜெயா டிவியில் ஆரம்பமாகும் சாவித்திரி என்ன மாதிரியான கதை? அதில் நடிக்கிற அனுபவம் எப்படி இருக்கிறது?

சாவித்திரி ஒரு நடிகையின் கதை. கதையைக் கேட்கும்போதே எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. மூன்று வித்தியாசமான கேரக்டர். நல்லா பெர்ஃபாம் பண்ணுவதற்கான கேரக்டர். நல்ல சப்ஜெக்ட். கேரக்டர் மாறிக் கொண்டே இருக்கும். ரொம்ப இன்னோசென்ட்டாக இருக்கிற ஒரு பெண் அவள் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்னைகள், அதனால் ஏற்படுகின்ற மாற்றங்கள், அதில் இருந்து மீண்டும் எப்படி ஒரு நல்ல நிலைக்கு வருகிறாள் இதெல்லாம் சொல்வதுதான் "சாவித்திரி'. அழகே இல்லாத ஒரு பெண் தன்னை எப்படி ஒரு நடிகையாக்கிக் கொள்கிறாள். ஒரு நடிகையாக அவளுக்கு ஏற்படும் ஏமாற்றங்களை எப்படிச் சந்திக்கிறாள் என்பது போன்ற கதை. நிறைய முயற்சியெடுத்துப் பண்ணியிருக்கேன். மக்களிடம் எப்படி வரவேற்பு இருக்கும் என்று தெரியவில்லை.

சினிமா, சின்னத்திரை என்ன வித்தியாசம்?

சின்னத் திரையில் நடிக்கும்போது நான்தான் ஹீரோயின். சின்னத் திரையில் பெண்களுக்குத்தான் அதிகம் முக்கியத்துவம் இருக்கும். நடிப்புத் திறமையை முழுமையாகக் காட்டுவதற்கு வாய்ப்பும் இருக்கும். சினிமாவில் அப்படிக் கிடையாது. வந்தோமா? நாலு சீன் பண்ணினோமா? டான்ஸ் பண்ணினோமா? அப்படித்தான் இருக்கும்.

தொடர்களில் நடிப்பதால் சினிமா "டச்' குறைந்திருக்குமே?

அப்படி ஒன்றும் இல்லை. நான் இப்போதும் சினிமாவில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறேன். இப்போது கூட "மன்மதராஜா' போய்க் கொண்டு இருக்கிறது. கன்னட படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.

எல்லா மொழிகளிலும் சேர்த்து எத்தனை படங்கள் நடித்திருக்கிறீர்கள்? அவற்றில் மறக்க முடியாத படம்?

தமிழ், தெலுங்கு, கன்னடம் மூன்று மொழிகளிலும் சேர்த்து இதுவரை 100 படங்கள் பண்ணியிருக்கிறேன். மறக்க முடியாத படம் என்று சொல்வதை விட எனக்கு நல்ல பெயர் வாங்கித் தந்த படம் "செந்தூரம்' தெலுங்குப் படம். அந்தப் படத்திற்கு நேஷனல் அவார்டு கிடைத்தது. தமிழில் "ரசிகன்' படம்தான் எனக்கு ஒரு பிரேக் கொடுத்தது. அதற்குப் பிறகு கேரக்டர் ரோல் என்று சொல்வது போல அமைந்தது "பொற்காலம்' தான்.

சினிமாவுக்கு இப்போது வருகிற ஆர்ட்டிஸ்ட் சினிமாவைப் பற்றி நன்றாகத் தெரிந்து கொண்டு வருகிறார்கள். நான் அந்த மாதிரி ட்ரெயினிங் எதுவும் எடுத்துக் கொண்டு வரவில்லை. இங்கே வந்துதான் எல்லாவற்றையும் கற்றுக் கொண்டேன்.

தமிழ் தவிர பிறமொழிப் படங்களில் என்ன மாதிரியான கேரக்டர்ஸ் பண்ணுகிறீர்கள்?

சமீபத்தில் கன்னடத்தில் "அணாதெரு' - பிதாமகன் ரீமேக், அதில் உபேந்திரா - விக்ரம் ரோல் பண்ணினார். தர்ஷன் - சூர்யா ரோல் பண்ணினார். அடுத்து ரமேஷ் அரவிந்த் ஜோடியாக ஒரு படம் பண்ணிக் கொண்டு இருக்கிறேன். அந்தப் படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. அது மராட்டி மொழிப் படம் ரீமேக். அப்புறம் "இந்திரா' என்று ஒரு படம். தர்ஷன் ஜோடியாக நடிக்கிறேன். முனி ரத்தினம் சார் ரீமேக் செய்த "ரத்தக் கண்ணீர்' படத்தில் நடித்தேன். அது நல்ல பெயர் வாங்கித் தந்தது.

சூட்டிங் இல்லாத நேரத்தில் உங்களுடைய பொழுதுபோக்கு?

நண்பர்களோடு ஜாலியாக அரட்டை அடிப்பது. சினிமாவுக்குப் போவது. வெளியே போய் சாப்பிடுவது. சிலநேரம் கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து கொண்டு இருப்பது.

எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்கள்?

என் கல்யாணம் எப்போது என்று எனக்கே தெரியாது. கடவுளுக்குத்தான் தெரியும். வீட்டில் மாப்பிள்ளை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். இன்னும் யாரும் முடிவாகவில்லை. முடிவானதும் எல்லாருக்கும் சொல்கிறேன்.
ஸ்ரீதேவி குமரேசன்

No comments:

Post a Comment