Tuesday, October 13, 2009

உறுதியாக இருந்தோம் என்றால் நம்மால் சாதிக்க முடியும். - ரா‌தி‌கா‌சரத்‌குமா‌ர்‌


அரசி இப்போது "செல்லமே' ஆகிவிட்டார். ஆமாம்! இதுவரை அரசியாக தமிழ் நெஞ்சங்களின் இல்லத்திற்கு வந்து இதயத்தில் இடம் பிடித்த ராதிகா, இப்போது போலீஸ் தொப்பியைக் கழட்டி வைத்துவிட்டு "செல்லமாக' செல்லம்மாவாகி பாசத்தைக் கொட்ட வருகிறார். சித்தி தொடருக்காக திருச்சி ஸ்ரீரங்கம், சென்று படப்பிடிப்பை நடத்தி வந்தவர், இப்போது திருக்கோவில்கள் குடிகொண்டிருக்கும் கும்பகோணம், சுவாமிமலையைச் சுற்றி படமாக்கி வந்திருக்கிறார். ஒரு மாலை வேளையில் அவரது அலுவலகத்தில் அவரிடம் பேச ஆரம்பித்தோம்:

செல்லமே' என்ன மாதிரியான தொடர்? மற்ற தொடர்களிலிருந்து இது எப்படி மாறுபட்டது?

அரசி, சித்தி இரண்டிலும் என்னை மையப்படுத்தி எடுத்திருந்தோம். "செல்லமே' ஒரு குடும்பத்தின் கதை. குடும்பத்தில் எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது பெரிய சவாலாக இருக்கும். இவங்க கெட்டவங்க. இவங்க ரொம்ப நல்லவங்க என பட்டியல் போடாமல் சாதாரண குடும்பங்களில் உள்ள கஷ்ட நஷ்டங்களைப் பாசப் பிரச்னைகளோடு சொல்கிற கதை. இன்றைய காலகட்டத்தில் கூட்டு குடும்ப வாழ்க்கையின் பெருமையை உணர்த்துவதாக இருக்கும். உயிருக்கு உயிரான நண்பர்கள்கூட சொத்துக்கு ஆசைப்பட்டு எதிரியாகிவிடுகிறார்கள். உறவுகள் பிரிந்தால் அந்தக் குடும்பம் எப்படித் தத்தளிக்கும் என்பதைச் சொல்லியிருக்கிறோம்.

வேறு என்ன புதிய சிறப்புகள் இருக்கிறது?

இந்தத் தொடர் கிராமிய மணத்தோடு இருக்கும்."மாறன்' என்கிற படத்தை இயக்கிய ஜவகர், இந்தத் தொடரை டைரக்ட் செய்கிறார். இதில் முதன் முறையாக என்னோடு சேர்ந்து எனக்கு அண்ணனாக ராதாரவி நடிக்கிறார். பெரும்பாலான காட்சிகளை கும்ப கோணம், சுவாமிமலை, திருவிடைமருதூர் போன்ற இடங்களில் எடுத்திருக்கிறோம். சினிமா படப்பிடிப்புக்குச் சென்ற மாதிரி அதே குவாலிட்டியோடு அவுட்டோரில் படமாக்கப்பட்டிருக்கிறது.

இரண்டு வருஷமா அரசியாக வாழ்ந்தீர்கள்? அந்தக் கதாபாத்திரத் திலிருந்து எப்படி வெளியே வந்தீர்கள்?

ரொம்ப கஷ்டமாகத்தான் இருந்தது. நான் அந்தக் கதாபாத்திரத்திலிருந்து வெளியே வர ரொம்ப நாளாகக் காத்திருந்தேன். சினிமாவில் வந்து ரெண்டு வேடம் பண்றதுக்கு நிறைய நேரம் எடுத்து பண்ணுவோம். டிவியைப் பொறுத்த வரைக்கும் நிற்கவே டயம் கிடையாது. அப்படி இருக்கும்போது ரெண்டு ரோல் செய்வது ரொம்ப கஷ்டமான விஷயம். குரலை மாற்ற வேண்டும், டிரெஸ் மாற்ற வேண்டும். ரொம்ப ரொம்ப சேலஞ்சிங்கான கேரக்டர். அந்த கேரக்டருக்கு குட்பை சொல்ற நேரம் வந்தது.. கஷ்டமாக இருந்தாலும் சந்தோஷம்தான்.

இரவு ஒன்பது முப்பது என்றால் அது உங்கள் நேரம் என பத்து வருடங்களுக்கும் மேலாக நிலைக்க வைத்துவிட்டீர்கள்? அதன் ரகசியம் என்ன?

ரகசியமே கிடையாது. எல்லாம் போராட்டம்தான். இயல்பிலேயே எனக்குள்ளே போராட்ட குணம் இருப்பதால் அதைத் தக்கவைத்துக் கொள்ள முடிகிறது. கஷ்டம் என்று சொல்ல முடியாது. தினம் ஒரு பிரச்னையை உருவாக்கி அதற்கு எதிர்பார்ப்பு உருவாக்க நிறைய உழைக்க வேண்டியிருக்கிறது. சில சமயம் மிகப்பெரிய சிக்கல்கள் எல்லாம் வரும். அதையெல்லாம் தாங்கி சமாளிக்க வேண்டியதுதான்.

"செல்வி'யாவும் "அரசி'யாகவும் நடித்தீர்கள். இதில் எந்த வேடம் உங்களுக்குப் பிடித்திருந்தது?

ரெண்டும் வித்தியாசம்தான். "செல்வி' மூணு வருஷம் பண்ணுனேன். "அரசி' ரெண்டரை வருஷம் பண்ணுனேன். எனக்கு நான் எடுத்துக் கொண்ட எல்லா வேடங்களும் பிடிக்கும், அதை நான் ரசித்துப் பண்ணுவதால்.

நீங்கள் தயாரிக்கும் "செந்தூரப்பூவே' தொடரில் நீங்கள் ஏன் நடிக்கவில்லை?

எவ்வளவுதான் நடிக்கிறது? நான் பிஸினûஸப் பார்க்கணும். தயாரிப்பைப் பார்க்கணும். நடிப்பைப் பார்க்கணும். பசங்களைப் பார்க்கணும். கணவரைப் பார்க்கணும். எல்லாம் இருக்கே. ஒரு சீரியலுக்கு மேல் நடிக்கிறது ரொம்ப கஷ்டமான வேலை. நேரம் கிடைக் கும்போது பசங் ககூடதான் இருக்கேன். அவங்க ஹோம் ஒர்க் பார்ப்பது, ஸ்கூல் பிரச்னைகளைப் பற்றிப் பேசுவது இதற்கே நேரம் போய்விடுகிறது.

சில நடிகைகளிடம் பேசியபோது உங்களை ரோல் மாடலாக நினைக்கிறார்கள்? அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

கீழே விழுந்தாலும் டக்குன்னு எழுந்திருச்சி நடக்க வேண்டும். உருண்டு புரண்டு அழுதுகிட்டு இருக்கமுடியாது. அதை ரொம்ப சீக்கிரமா கத்துக்கிட்டேன். அதைப் பார்த்து அப்படி நினைச்சிருப் பாங்க. நான் எப்படி வந்தேன், எப்படி இருக்கேன், எப்படி எல்லாம் விழுந்து அடி பட்டு எழுந்தேன் என எல்லாமே அவர்களுக்குத் தெரிகிறதில்லையா?

வேறு படங்களில் நடிப்பதில்லையே ஏன்?

நடிக்கக் கூடாது என்று இல்லை. நேரம் சரியாக அமையவில்லை. கண்டிப்பாக நடிப்பேன். சரியான நேரமும் கேரக்டரும் அமைந்தால் நிச்சயம் நடிப்பேன்.

உங்களுடைய "அரசி' இயக்குநர் சமுத்திரக்கனி, "நாடோடிகள்' படத்தின் மூலம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என எல்லா மொழிலேயும் வாய்ப்பு கிடைத்து உயர்ந்திருக்கிறாரே? அவரைப் பற்றி?

அந்தக் கதையை நான் பண்ண வேண்டியது. அவர் என்னிடம் அந்தக் கதையை சொன்னபோதே நான் சொன்னேன். ரொம்ப நல்லா இருக்கு கனி. இந்தச் சமயத்துல எனக்கு வேறு கமிட்மென்ட் இருந்ததால் இந்தப் படம் பண்ண முடியாமல் போய்விட்டது. இருந்தாலும் அவர் நம்பிக்கையோட ஜெயிச்சிருக்கார். "செல்லமே' தொடர் ஆரம்பமாவதைக் கேள்விப்பட்டு, "உங்க புது சீரியலில் பத்து நாள் வந்து ஒர்க் பண்ணிட்டு போவட்டுமா?'ன்னு போன் செய்தார். அப்படி ஒரு சென்டிமெண்ட் அவரிடம்.

சின்னத்திரை மூலமா மக்களைத் தினம் சந்திக்கிறீர்கள்? அவர்களுக்கு இதன் மூலமாக என்ன சொல்ல விரும்புறீர்கள்?

நான் நினைக்கிறது சொல்றது எல்லாமே சீரியல் மூலமா சொல்லிடுறேன். அடிப் படையில் எனக்கு "நீ அப்படி இருக்கணும், இப்படி இருக்கணும்' என்று அட்வைஸ் பண்ணுவதெல்லாம் பிடிக்காது.எந்தத் துறையில் இருந்தாலும் குடும்பத் தலை வியா இருந்தாலும் அல்லது வேலைக்குச் சென்றாலும் சமையல்காரியாக இருந்தாலும் எந்த இடத்திலும் உறுதியாக இருந்தோம் என்றால் நம்மால் சாதிக்க முடியும்.
ஸ்ரீதேவி குமரேசன்

No comments:

Post a Comment